No results found

    ராசி எண்கள்! #Nuemerology


    ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் போன்று மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்க எண்கணிதமும் பெரிதும் உதவுகிறது. எண்களுக்கு நம் முன்னோர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஞானநூல்கள் பலவும் எண்களின் சிறப்பை விளக்குகின்றன.

    உதாரணம் சொல்வதானால்... நம் உடலின் ஆதாரச் சக்கரங் களிலும் எண்களின் ஆதிக்கம் உண்டு என்பார்கள்.

    சகஸ்ரார மையம் - எண் 5 - புதன்

    ஆக்ஞா மையம் - எண் 3 - குரு

    விசுத்தி மையம் - எண் 6 - சுக்கிரன்

    அனாகத மையம் - எண் 8 - சனி

    மணிப்பூரகம் - எண் 1 - சூரியன்

    சுவாதிஷ்டானம் - எண் 2 - சந்திரன்

    மூலாதார மையம் - எண் 9 - செவ்வாய்.

    இவ்வாறு எண்கள் கிரக ஆதிக்கத்துடன் பலாபலன்களைத் தருகின்றன. உதாரணமாக, ஒருவருக்கு சுக்கிர தசை நடக்கிறது என்று வைத்துக்கொண்டால், சுக்கிரனின் எண்களான 6, 15, 24 ஆகிய தேதிகள் மற்றும் அதன் இணை எண்களான 9, 18, 27 ஆகிய தேதிகளில், அவர் வாழ்வில் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடந்தேறும் என்பர்!

    சரி, இனி எண்களின் அடிப்படையில் பலன் அறிவது குறித்துக் காண்போம்.

    ஒருவர் பிறந்த தேதியின் மூலம் பிறவி எண்ணையும், அவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக்கூட்டி வரும் எண்ணை விதி எண் என்றும் கணக்கிடுவார்கள். இந்த எண்களின் ஆதிக்கத்தில், அவரின் வாழ்வும் எதிர்காலமும் அமையும் என்பது எண் கணிதத்தின் அடிப்படை.

    ஒவ்வொரு நட்சத்திரத்தில், ராசியில் பிறந்தவர்களுக்கு இந்தந்த குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதற்கேற்பவே அவர்களது செயல்பாடும், பலன்களும் அமையும்.

    இந்த எண் கணித பலனுடன், அவருக்கு உரிய எண்ணின் மீதான கிரகங்களின் ஆதிக்கத்தையும் அறிந்து சொல்லப்படும் பலன், மிகத் துல்லியமாக அமையும்.

    கீழ்க்காணும் விவரப்படி உரிய எண்களின் மீது நவநாயகர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்கின்றன ஜோதிட நூல்கள்.

    எண்: 1 - சூரியன்

    எண்: 2 - சந்திரன்

    எண்: 3 - குரு

    எண்: 4 - ராகு

    எண்: 5 - புதன்

    எண்: 6 - சுக்கிரன்

    எண்: 7 - கேது

    எண்: 8 - சனி

    எண்: 9 - செவ்வாய்

    ஆம்! நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அதன் அலைவரிசைக்கு ஏற்ற நிறங்கள், திக்குகள், ரத்தினங்கள், உடலுறுப்புகள் மீது ஆதிக்கம் செலுத்துவதுபோன்று, தமக்கு உரிய எண்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    ஒருவர் பிறந்த தேதி 6. 2. 1976 எனில் அவருடைய விதி எண் 4 ஆகும். இதன்படி இங்கே நாம் நம் விதி எண்ணைக் கணக்கிட்டு, கிரகங்களின் ஆதிக்கத்துக்கு ஏற்ப அந்த எண்ணில் பிறந்தோரின் குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

    கிரகங்கள்... எண்கள்... பலன்கள்!

    1. இவர்களை ஆள்பவர் சூரியன். இந்த எண் விதி எண்ணாக இருந்தால் அவர் தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத் திறன் கொண்டவராக இருப்பார். சகலத்தையும் சமநிலை மனோபாவத்துடன் அணுகும் இவர்கள், அதன் மூலம் பெரும் கூட்டத்தை, சமூகத்தை, வழிநடத்தும் வல்லமையைப் பெறுவர். சிவ வழிபாட்டால்வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

    2. இவர்களின் அதிதேவதை அம்பாள். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்தவர்கள். நட்பு, பாசம் உள்ளவர்கள். சட்டென உணர்ச்சி வசப்படுவார்கள். துன்பம் வந்தால் எளிதில் துவண்டுவிடுவார்கள். மனித நேயம் மிக்கவர்கள். வேகமாகச் செயலாற் றும் தன்மை இவர்களிடம் உண்டு. 16 வயதுக்குப் பிறகு சந்திக்கும் நபர்களால் வாழ்வில் திருப்பம் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இவர்கள் இருப்பார்கள்!

    3. இவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். சுகத்தை விரும்புபவர்கள். பொதுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்ப தில் ஆர்வம் உள்ளவர். பலரும் இவர்களை ரோல்மாடலாகக் கொள்வார்கள். 1,3,9 தேதிகள் அதிர்ஷ்டம் தரும். பதவியில் உள்ளோருக்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பார்கள்!

    4. நல்லிணக்கம், உண்மை பேசுதல் இவர்களின் லட்சியமாக இருக்கும். உழைப்பாளிகள். ராகுவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். சவால்களை ஏற்றுக் கொள்வார்கள். மனதை ஒரு நிலைக்குள் வைத்திருப்பார்கள். நண்பர்கள் அதிகம். துர்கை வழிபாடு நன்மை தரும்.

    5. பஞ்ச பரமேஸ்வரர், பஞ்ச பூதங்கள், பஞ்சேந்திரியங்கள், பஞ்சலோகம் என 5-ம் எண்ணின் மகத்துவம் அமைகிறது. புதனின் ஆதிக்கம் மிக்க எண் 5-ஐ விதி எண்ணாகக் கொண்டவர்கள், சமயோசித புத்தி, பல்துறைத் திறமை, சொல்வன்மை மிக்கவர்கள். கோபதாபமும் பிடிவாதமும் மிகுதியாக இருக்கும். சொந்த உழைப்பால் பொருளீட்டி உயர்நிலை அடைவார்கள். கன்சல்டன்சி தொழில் ஏற்றம் தரும். பத்திரிகை மற்றும் கலைத் துறையிலும் சாதிப்பார்கள். மகா கணபதி வழிபாடும் ஹயக்ரீவர் வழிபாடும் இவர்களுக்கு நன்மை சேர்க்கும்.

    6. இந்த எண்ணை ஆளும் தெய்வம் முருகன். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண். இதை விதி எண்ணாகக் கொண்டவர், நல்லவர்; தர்ம சிந்தனை உள்ளவர்; உழைப்பில் நம்பிக்கைக் கொண்டவர். ‘ஆறுவது சினம்’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர். நடுத்தர வயதில் நிறையச் சம்பாதித்து, சௌபாக்கியமாக வாழ்வார். பெருமாள் வழிபாடு இவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.

    7. அபார தன்னம்பிக்கை உள்ளவர்கள். கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர். சிந்தித்துச் செயல்பட்டால், வாழ்க்கையில் உயரலாம். இவர்கள் காற்றைப்போல கட்டுக்கடங்காத வர்கள். அனைத்து விஷயங்களையும் அசைபோடுவார்கள். எவ்வளவு பணம் சேர்ந்தாலும் கர்வம் கொள்ளாதவர். இவர்கள், வடகிழக்கு திசை நோக்கி செயலைத் தொடங்க வெற்றி நிச்சயம். விதி எண் 7 பெற்றவர்கள், சிதம்பரம் நடராஜரை வணங்கி வழிபடலாம். அதனால் வாழ்க்கை செழிக்கும்.

    8. எண்களில் தனித்துவம் பெற்றது 8. சனி ஆதிக்கம் பெற்றது. எண்திசைகள், எண்திசைக் காவலர்கள் என்று எட்டின் சிறப்பு நீள்கிறது. 8-ம் எண் பெற்றவர்கள் சுயதொழில், வாணிகம், அரசியல் போன்ற துறைகளில் வெற்றி பெறுபவர்கள். வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். தாங்கள் பட்ட கஷ்டங்களை, சுற்றியிருப்பவர்கள் படக்கூடாது என்று நினைப்பார்கள். ஸ்ரீரங்கநாதர் வழிபாடு நன்மை அளிக்கும்.

    9. எண் 9 செவ்வாயின் ஆதிக்கம் பெற்றது.இந்த எண்ணைக் கொண்டவர்கள் ஆழ்ந்த அறிவும், உயர்ந்த சிந்தனை களும் கொண்டவர்கள். சிந்தித்துச் செயலாற்றி, சாதிப்பார்கள். மனித நேயமும், தர்ம சிந்தனையும் உடையவர்கள். சற்றுப் போராட்ட குணமும் உண்டு. முருகன் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், எல்லா நற்பலன்களும் கிடைக்கும்.

    களத்திர ஸ்தானமும் 9 கிரகங்களும்!

    ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம் என்று சிறப்பிக்கப்படும். திருமண யோகம், வாழ்க்கைத் துணைவர் குறித்த விவரங்களை இந்த 7-ம் இடம் கொண்டு கணிப்பார்கள். 7-ம் இடத்தில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதை நாமும் அறிவோமா?

    சூரியன்: மனச்சோர்வு தரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும். கௌரவம் பாதிக்கப்படும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். இவர்கள் கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது.

    சந்திரன்: பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் சந்திரன் இருந்தால், கணவனை மிகவும் நேசிப்பாள். ஆணின் ஜாதகத்தில் ஏழில் சந்திரன் இருந்தால் அன்பும் பண்பும் மிக்க மனைவி அமைவாள். இல்லறம் இனிக்கும்.

    செவ்வாய்: 7-ல் செவ்வாய் இருப்பது நல்லதல்ல. இல்லற வாழ்வில் அமைதியின்மை, அதிக அலைச்சல் இருக்கும். அதேநேரம் இந்த ஏழாம் இடம் மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய இடங்களாக இருந்து அங்கு செவ்வாய் இருந்தால், கெடுபலன்கள் குறையும்.

    புதன்: ஏழில் புதன் இருக்கப் பிறந்தவர் களுக்குச் சொந்தத்தில் பெண் அல்லது மண மகன் அமைவர். ஜாதகத்தில் 7-ம் இடத்தில் உள்ள புதன் வலுப்பெற்று இருந்தால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை நிலை படிப்படியாக உயரும். செய்யும் தொழில் மேலும் மேலும் விருத்தியடையும்.

    குரு: ஏழாம் இடத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். வாழ்க்கை யோகமானதாக அமையும். உயர்ந்த உத்தியோகம், உயர்ந்த பதவி போன்றவை ஏற்படும். ஜாதகத்தில் 7-ம் இடத்தில் குரு இருந்தால் அழகும், பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். செல்வம், செல்வாக்கு, புகழ் ஏற்படும். ஆனாலும் இந்த ஸ்தானத்தில் குரு இருந்தால் திருமணம் சற்று தாமதமாகவே நடைபெறும்.

    சுக்கிரன்: 7-ல் சுக்கிரன் இருந்தால் அழகிய வாழ்க்கைத் துணை அமையும். அதிர்ஷ்ட சாலியான இவர்கள் எப்போதும் சிற்றின்பத்தில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குச் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும்.

    சனி: 7-ல் சனி இருப்பது நல்லதல்ல. தேவையற்ற பெண் சகவாசமும், அதனால் தொல்லைகளும் ஏற்படும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் நிம்மதியில்லாத நிலைமையை ஏற்படுத்தும். தீய நடத்தைகள் காரணமாக உடலும், மனமும் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட நேரிடும். பணத் தட்டுப்பாடும் உண்டு.

    ராகு: 7-ம் இடத்தில் ராகு இருந்தால், அந்த ஜாதகர் யாருக்கும் கட்டுப்படமாட்டார். சுதந்திரமாக செயல்படுவார். மிகவும் புத்திசாலி. எப்போதும், ஏதேனும் வழக்குகளைச் சந்திக்க நேரிடும். பெண் மோகம் அதிகமுண்டு. பொதுவாக 7-ல் ராகு, இல்லற வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். இந்த ராகுவை சுப கிரகங்கள் பார்த்தால் கெடுபலன்கள் குறையும்.

    கேது: 7-ல் கேது இருப்பது ஒழுக்கக் குறைவை ஏற்படுத்தும். தகுதியற்ற பெண் அல்லது ஆண் தொடர்பு ஏற்பட்டு, அதனால் பண விரயமும், தொல்லைகளும் உண்டாகும். இங்குள்ள கேதுவைச் சுப கிரகங்கள் பார்த்தாலும் அல்லது சேர்க்கை பெற்று இருந்தாலும் கெடு பலன்கள் குறையும்.

    பொதுவாக ஜாதகத்தில் 7-ம் வீடு சுப பலம் பெற்றிருந்தாலும், 7-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தாலும் நல்ல குடும்ப வாழ்க்கையும், நல்ல பிள்ளைகளும் அமைவார்கள்.

    Previous Next

    نموذج الاتصال