மனித வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறும் வழிகள் குறித்து ஜோதிட சாஸ்திரம் விரிவாக விளக்குகிறது. அதேபோல், மனிதனின் பெயர் அதிர்ஷ்டகரமாக அமையவேண்டும் என்றும் வழிகாட்டுகிறது. தனி மனிதனின் வாழ்வில், குழந்தைப் பருவம் முதல் முதுமை வரையிலும் அவனை அடையாளப்படுத்துவது, அவனுடைய பெயர்தான்.
வரலாற்றுப் பதிவுகளில் இன்றும் சிறப்பாகப் போற்றப்படும் சரித்திரப் புருஷர்களின் பெயர், காலம் கடந்து நீடித்து நிலைத்திருப்பதைக் காண்கிறோம். ஆக, ஒருவரது பெயருக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே, ஒவ்வொரு வருக்கும் அவருடைய பெயர் அதிர்ஷ்டகரமாக அமைய வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.
மனிதப் பிறவி அபூர்வமானது; இறைவன் கொடுத்த வரம் அது. நம் பிறவியை நாமே தீர்மானித்துக்கொள்ள இயலாது என்பதே உண்மை. அதேநேரம், பெயர் சூட்டிக்கொள்வது என்பது நமது முயற்சியாகும்.
குழந்தைகள் பிறந்து சில நாள்களுக்குப் பிறகு பெயர் சூட்டுவது வழக்கம். அவ்வகையில் சிறப்பான, அதிர்ஷ்டம் கைகூடும் வகையிலான பெயர்களைச் சூட்டுவது குறித்த வழிமுறைகள் இங்கே உங்களுக்காக...
ஜன்ம நட்சத்திரம்
ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட நாளில் - நட்சத்திரத்தில் பிறக்கிறது. அந்த நட்சத்திரமே குழந்தையின் ஜன்ம நட்சத்திரம் ஆகும். உதாரணத்துக்கு... பரணி நட்சத்திர நாளில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையின் ஜன்ம நட்சத்திரம் பரணி ஆகும். பஞ்சாங்கக் குறிப்புகள் மூலம் அன்றைய தினத்தின் நட்சத்திரத்தை - ஜன்ம நட்சத்திர விவரத்தை அறியலாம்.
ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரையில் 27 நட்சத்திரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒலி வடிவ அமைப்புகள் உண்டு. இந்த ஒலி வடிவம் நான்கு எழுத்துகளாக அமையப்பெறும். குறிப்பிட்ட ஜன்ம நட்சத்திரத்தை ஒட்டிய அந்த நான்கு எழுத்துகளில் ஏதாவது ஒன்று, குழந்தையின் பெயர் ஆரம்பமாக அமைவது விசேஷம்.
உதாரணமாக ஒரு குழந்தை அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கேது பகவான் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பிறவி எண்ணும் பெயர் எண்ணும்
குழந்தை பிறக்கும் ஆங்கில தேதியின் அடிப்படையில் பிறவி எண் மற்றும் பெயர் எண் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, குழந்தையானது 24 .10. 2021-ம் தேதி பிறந்தால், பிறவி எண் 6 (2+4) ஆகும். இங்ஙனம் தேதியின் அடிப்படையில் பிறவி எண் ஒன்று முதல் ஒன்பது வரையிலும் அமையும். அதேபோல் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வரும் ஒற்றை எண்ணே ‘விதி எண்’ ஆகும். பிறவி எண்ணும், விதி எண்ணும் விதிப்படியே நமக்கு அமையும். அவற்றை நாம் தேடிப் பெற முடியாது; மாற்றிக் கொள்ளவும் முடியாது.
அதேநேரம், பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான எண்ணை நம் பெயர் எண்ணாக வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் பிறவி எண்ணுக்குப் பொருத்த மான நட்பு எண்ணாக, பெயர் எண் அமையும்படி பெயர் சூட்டுவது சிறப்பாகும்.
பெயர் எண் ஆங்கில எழுத்துகளின் அடிப்படையில் அமையும். ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் கீழ்க்காணும்படி தனித்தனியே எண் வலிமை கொடுக்கப்பட்டுள்ளது.
A I J Q Y - 1.
B, K, R - 2.
C, G, L , S - 3.
D, M, T - 4.
E, H, N, X - 5.
U, V, W - 6.
O, Z - 7,
F, P - 8.
இந்த எழுத்துகளைக் கொண்டு ஒருவரது பெயர் எண்ணை அறியலாம். இந்த எண்கள் `ஷீரோ’ முறைப்படி தரப்பட்டுள்ளன. குழந்தையின் பெயரை இனிஷியலுடன் (தகப்பனார் பெயரின் முதல் எழுத்து) சேர்த்துப் பார்க்கவேண்டும்.
உதாரணமாக H.VIJAY என்பது, 15-ம் தேதியன்று பிறந்த குழந்தையின் பெயர் எனில், பெயர் எண் - 5 + 6 + 1 + 1 + 1 + 1 = 15. இதன் ஒற்றைக் கூட்டு எண் 6.
ஆக, குழந்தை பிறந்த தேதி எண் - 6; குழந்தையின் பெயர் எண்ணும் 6. இரண்டும் ஒற்றுமையாக அமைந்துள்ளபடியால் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமையும் எனலாம்.
ஒருவேளை, இரண்டும் சற்று மாறுபட்டு இருந்தால், இரண்டும் பொருந்தும்படி... உச்சரிப்பு மாறாத வண்ணம் பெயரின் ஆங்கில எழுத்துகளில் சிறு மாற்றம் செய்துகொள்ளலாம். இதனால் வளமான வாழ்வு அமையும் என்பது ஷீரோ போன்ற அறிஞர்களின் கூற்று.