No results found

    பிறந்த கிழமையும் வழிபாடுகளும்!


    கிழமைகளும் குணாதிசயங்களும்

    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரின் பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. குறிப்பிட்ட கிழமையில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட வழிபாடுகளைச் செய்வதன் மூலம் மேன்மையான பலன்களைப் பெறலாம்.

    ஞாயிற்றுக்கிழமை: இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். இவர்கள் ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.

    திங்கள்: சாந்தமான மனம் படைத்தவர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் உள்ளவர். இவர்கள் திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.

    செவ்வாய்: இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் பைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.

    புதன்: இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளி; ரகசியம் காப்பதில் வல்லவர். புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் மகாவிஷ்ணுவை வழிபடலாம். பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.

    வியாழன்: வியாழனன்று பிறந்தவர்கள் நீதி-தர்மத் துக்கு பக்க பலமாக விளங்குவர். உற்றார்- உறவுகளுக்கு உதவிபுரிவர். வியாழக் கிழமைகளில் அதிகாலை எழுந்து தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் விசேஷ பலனைப் பெற்றுத் தரும்.

    வெள்ளி: இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பேச்சில் வல்லவர். இவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் அம்பாளை அர்ச்சித்து, ராஜராஜேஸ்வரி அஷ்டகம், லலிதா திரிசதி ஆகியவற்றைப் பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

    சனி: இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம் பயக்கும்.

    Previous Next

    نموذج الاتصال