No results found

    உங்களை ஒப்புக்கொடுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்


    உண்மையாகவே இயேசு நமக்காக ரத்தம் சிந்தாமல் இருந்திருந்தால் இன்றைக்கு விலையேறப்பெற்ற ரட்சிப்பை பெற்றிருக்கவே முடியாது.

    இயேசுவின் ரத்தத்தினால் நாம் பெறுகிற முக்கியமான ஆசீர்வாதங்களைக் குறித்துத் தியானிப்போமா...

    அன்று இஸ்ரவேல் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது பஸ்காவை ஆதரிக்கும்படி கட்டளையிட்டார். ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை எடுத்து நிலைக்கால்களில் பூசும்படி கட்டளையிட்டபோது அநேக ஆசீர்வாதங்களை இஸ்ரவேலர் பெற்றுக்கொண்டார்கள்.

    அதேபோல இன்றும் ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தால் நாம் விசுவாசத்தோடு கழுவப்படும்போது, நாமும் அநேக ஆசீர்வாதங்களுக்குப் பாத்திரமாய் மாறுகிறோம்.

    துன்பம் அணுகாது

    ‘நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த ரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும், அந்த ரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன், நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்’ யாத்.12:13

    ரத்தம் பூசப்பட்ட வீடுகளில் வாதை அணுகவில்லை. ரத்தம் பூசப்படாத ஒவ்வொரு எகிப்தியரின் வீட்டிலும் பிள்ளைகள் அழிக்கப்பட்டார்கள் என்பது நமக்குத் தெரியுமல்லவா? இயேசுவின் ரத்தம் எவ்வளவு விலையேறப்பெற்றது. உங்கள் வீட்டில், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மேல் இயேசுவின் ரத்தத்தைப் பூசும்போது வாதை உங்கள் கூடாரத்தை அணுகுவதில்லை.

    ‘ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’ சங்கீதம் 91:10

    எகிப்திலுள்ள ஒவ்வொருவருடைய வீட்டிலும் நடுராத்திரியில் கூக்குரல் உண்டானது. ஆனால் ரத்தம் பூசப்பட்ட இஸ்ரவேலருடைய வீடுகளில் கூக்குரல் உண்டாகவில்லை.

    அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

    ‘நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றையதினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது’ யாத்திராகமம் 12:41

    400 வருஷமாக இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலே அடிமை களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எந்த நாளில் ரத்தம் பூசப்பட்டதோ அன்று ராத்திரியிலேயே அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தார்கள் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோமே.

    பாவம், சாபம், உலக சிநேகம், கடன் பிரச்சினை... போன்றவற்றினால் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்களா? எனக்கு ஒரு விடுதலை கிடைக்காதா? என ஏங்குகிறீர்களா? இயேசுவின் ரத்தம் சகல பாவம், சாபம், வியாதி, பிரச்சினை இவற்றிலிருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கக்கூடியது. எனவே இன்றே ரத்தத்தினால் கழுவ ஒப்புக்கொடுங்கள். இன்றே ஒரு விடுதலையைக் காண்பீர்கள்.

    ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்’ 1. யோவான் 1:7

    சத்துருவின் பிடியிலிருந்து விடுதலை

    பாவம், சாபத்திலிருந்து விடுதலை பெற்றாலும் சாத்தான் பலவிதங்களில் நம்மைப் பின் தொடர்ந்து கொண்டுதானிருப்பான். அன்று இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தாலும் பார்வோனும், அவன் சேனைகளும் பின்தொடர்ந்தனர். ஆனால் வேதம் சொல்லுகிறது:

    ‘அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள், நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்றான்’ யாத்திராகமம் 14:13,14

    அன்று எகிப்தியரோடு யுத்தம் பண்ணி, அவர்களைக் கலங்கடித்து, செங்கடலில் அழித்துப்போடக் காரணம், இஸ்ரவேலர் வெற்றியாய், விடுதலையாய் வாழ வேண்டுமென்பதற்காகவே.

    இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவர் யுத்தம் பண்ணுகிறார். சத்துருவின் கிரியைகளை அழித்து சந்தோஷமான, சமாதானமான வாழ்வு வாழ தேவன் உங்களுக்குக் கிருபை பாராட்டுவார்.

    பிரியமானவர்களே! இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட இன்றே உங்களை ஒப்புக்கொடுங்கள். அற்புதங்களைக் காண்பீர்கள்.

    Previous Next

    نموذج الاتصال