No results found

    விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்


    கிறிஸ்துவின் பாடுகள் பற்றி நாம் தியானித்து வரும் இந்த நாட்களில் கிறிஸ்துவின் பிரதானமான போதனையான தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தைக் குறித்து நாம் தியானிப்போம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்(யோ:3:16) என்று வேதம் கூறுகிறது. இன்றைய நாட்களில் தேவைகள், வியாதிகள், பிரச்சனைகளிலிருந்து விடுதலை என்று பலவிதமான காரியங்களுக்கு பதில் தேடி அனேக இடங்களுக்கு அலைகிறவர்கள் உண்டு. இயேசுவின் நாட்களிலும் இப்படிபட்ட ஜனங்கள் அனேகர் காணப்பட்டார்கள். ஆனால் அவர்களில் யாரெல்லாம் இயேசுவின்மேல் விசுவாசமாக இருந்தார்களோ அவர்கள் அற்புதத்தைப் பெற்றார்கள்.

    அவர் தம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளையும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்பதையும் போதித்தார். இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான காரியங்களுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலை பெற்றுத்தரும். அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருக்காகவும் அவர் சிலுவையில் ரத்தம் சிந்தியிருக்கிறார். நாம் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் பெற்றுக்கொள்ள தகுதியோ, அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே. அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்று சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசியபோதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறியபோதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.

    தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவரிடத்தில் தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு, தன் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி:2:15) என்று வேதம் கூறுகிறது. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி மூன்றாம் நாளிலே எழுப்பினார். தேவன் கடலுக்கும் எல்லையை நியமித்து இம்மட்டும் வா,மிஞ்சி வராதே என்று தம் வார்த்தையையே எல்லையாக நியமித்தவர். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை நமக்கு செய்ய வல்லமையுள்ளவர். கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதை கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவர். கிறிஸ்துவை விசுவாசிப்போம், தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.

    Previous Next

    نموذج الاتصال