நீங்கள் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு உங்கள் குணங்களைப் பற்றி விளக்குவதே எண்கணிதம். 1 முதல் 9 வரை பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் 1 முதல் 9 வரை அமைந்திருப்பவர்களுக்கு, அவரவர்களின் பிறந்த தேதி அல்லது பெயரெண் அடிப்படையில் பலன்களை கணித்துக் கூறுவதே எண்கணிதம் பலன்கள்.
ஒருவருடைய பிறந்த தேதி அல்லது பெயரெண் அடிப்படையில் அவர்களுடைய இயல்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
ஒருவரின் பிறந்த தேதி 10 - ஆக இருந்தால், அவருடைய எண் 1 ஆகும் (1+0=1). அதேபோல் ஒருவரின் பிறந்த தேதி 15-ஆக இருந்தால் அவருடைய எண் 6 ஆகும் (1+5=6). இப்படியே ஒருவர் அவருடைய பிறந்த தேதியை அறிந்துகொள்ளலாம்.
ஒருவரின் பிறந்த தேதி, அல்லது பெயரெண் 1-ல் அமைந்திருந்தால், அவர் தன்னம்பிக்கை மிக்கவராகக் காட்சி தருவார். தைரியம், மற்றும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவராக இருப்பார். சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். இவர் எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தில் தலைமைப் பொறுப்பு வகிப்பார். ஆளுமைத் திறனும், மன உறுதியும் மிக்கவர்கள். இவர்கள் சூரியனை வழிபடுவது நல்லது. இறைபக்தியால் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைப்பார்கள்.
பிறந்த தேதி அல்லது பெயரெண் 2-ல் அமைந்திருந்தால், மிகவும் மென்மையானவர்களாகவும், பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் இருப்பார்கள். அதே நேரம் வெகு விரைவில் உணர்ச்சிவசப் படுவார்கள். ஒரு சிறு துன்பத்தையும் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். பரபரப்பாகவும், வேகமாகவும் செயல்படும் இவர்கள், சிறு சோதனை வந்தாலும் சோர்ந்து போவார்கள். இவர்கள் தங்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இவர்கள் அம்பிகையை வழிபடுவதால், வாழ்க்கையில் பல வளங்கள் சேரும்.
பிறந்த தேதி அல்லது பெயரெண் 3-ல் அமைந்திருப்பவர்கள், மற்றவர்களைக் கவரும் தோற்றம் பெற்றிருப்பார்கள். புதுப்புது ஆடை, ஆபரணங்களை விரும்புவார்கள். ஆனால், இவர்கள் தங்களுக்கே இயல்பாக இருக்கும் பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்வதன் மூலம், வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரியலாம். இவர்களில் பலரும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பிறந்த தேதி அல்லது பெயரெண் 4-ல் அமைந்திருந்தால், எந்த ஒரு பேதமும் பார்க்காமல் அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். புரட்சிகரமான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள். எதிலும் கட்டுப்பாட்டோடு வாழும் இவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். கடுமையாக உழைக்கும் இவர்கள், சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் துர்கையை வழிபடுவது நல்லது.
பிறந்த தேதி அல்லது பெயரெண் 5-ல் அமையப் பெற்றவர்கள், பல துறைகளிலும் வித்தகர்களாகத் திகழ்வார்கள். இயல்பாகவே சமயோசித புத்தி கொண்டவர்கள். சிறந்த பேச்சாளர்களாகத் திகழ்வார்கள். கோபமும், பிடிவாதமும் இருக்கும். சொந்த உழைப்பினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள். இவர்கள் மகா விஷ்ணுவை வழிபடுவதால், அளவற்ற நன்மைகளைப் பெறலாம்.
பிறந்த தேதி அல்லது பெயரெண் 6-ல் அமைந்திருப்பவர்கள், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றிருப்பார்கள். மிகவும் பொறுமைசாலி. உழைப்பில் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி கோபம் வந்தாலும் உடனே தணிந்துவிடும். இவர்கள் இளமைப் பருவத்தில் மிகவும் சிரமமான நிலையில் இருந்தாலும், வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் அளவற்ற செல்வமும், சகல வசதிகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
பிறந்த தேதி அல்லது பெயரெண் 7-ல் அமைந்திருப்பவர்கள், பொறுமையாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். தாங்கள் விரும்பியதை முடிக்கவேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்படுவார்கள். ஆன்மிகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருப்பார்கள். கேதுவின் ஆதிக்கத்தில் இவர்கள் இருப்பதால், இவர்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது மிகவும் நல்லது.
பிறந்த எண் அல்லது பெயரெண் 8-ஆக அமையப்பெற்றவர்கள், மன உறுதி கொண்டவர்கள். சொந்தமாக தொழில் செய்து முன்னேறவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். வர்த்தகம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபட்டு, சாதனை புரிவார்கள். இவர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால், நீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வார்கள். இவர்கள் சிவபெருமான், ஆஞ்சநேயர் ஆகியோரை வழிபடுவது நல்லது.
பிறந்த தேதி அல்லது பிறவி எண் 9- ல் அமையப் பெற்றவர்கள், மனித நேயம் மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கஷ்டத்தில் பங்கேற்கும் இவர்கள், தர்ம சிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆழ்ந்த அறிவும், உயர்வான சிந்தனைகளும் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும். நன்றாகச் சிந்தித்து அதன் பிறகே செயலில் இறங்குவார்கள் என்பதால், இவர்களுக்குத் தோல்வி என்பதே இருக்காது.
இந்தக் கட்டுரையில் பெயரெண் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறோம். பெயரெண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.