No results found

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீமுனுசாமி சித்தர்- பரங்கிமலை


    சிவபெருமானுக்கு நிகராக யாருமே கிடையாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர் பிருங்கி முனிவர். இதனால் இவர் சிவபெருமானை தவிர வேறு யாரையுமே வணங்கியது இல்லை. சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவியைக்கூட அவர் கண்டு கொள்வதில்லை.

    இதை கவனித்த பார்வதி தேவிக்கு பிருங்கி முனிவர் மீது கோபம் ஏற்பட்டது. வேண்டுமென்றே பிருங்கி முனிவர் தன்னை உதாசீனம் செய்வதாக நினைத்தார். எனவே பிருங்கி முனிவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். ஒருநாள் சிவபெருமானை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் வந்து கொண்டிருந்தார். இதை கவனித்த பார்வதி தேவி சிவபெருமானை கட்டிப்பிடித்து கொண்டார். பிருங்கி முனிவர் இன்று தன்னையும் சேர்த்து தான் வழிபட வேண்டியதிருக்கும் என்று பார்வதி நினைத்தார். ஆனால் பிருங்கி முனிவரோ சிவபெருமானை மட்டுமே வழிபட வேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருந்தார்.

    வண்டு வடிவம் எடுத்த அவர் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் இடையே மிக லாவகமாக புகுந்து சென்று சிவபெருமானை மட்டும் சுற்றிவந்து வழிபட்டார். இதைக் கண்ட பார்வதி தேவிக்கு கோபம் மேலும் அதிகரித்தது. சிவன் வேறு சக்தி வேறு அல்ல என்பதை உணர்த்துவதற்காக அவர் கடும் தவம் இருந்து சிவபெருமான் உடலில் பாதியை பெற்றார். பார்வதியின் ஆற்றலை கண்ட பிறகு பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்தார். சிவனுக்கும் பார்வதிக்கும் வேற்றுமை இல்லை என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும், தனது நிலையை மேம்படுத்தவும் தவம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் பூமியில் பல இடங்களை தேடி அலைந்தார். கடைசியில் அவரது கண்களில் கிண்டியில் உள்ள சிறிய மலைப்பகுதி தென்பட்டது.

    தனக்கு ஏற்பட்ட இழுக்கை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த மலைதான் சிறந்த இடம் என்று பிருங்கி முனிவர் தீர்மானித்தார். அந்த மலை உச்சியில் அமர்ந்து தவம் செய்தார். பல ஆண்டுகள் அவரது தவம் நீடித்தது. அவரது தவத்தை மெச்சி சிவபெருமான் அவருக்கு நந்தி வடிவில் காட்சி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிருங்கி முனிவர் அந்த மலையில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்ததால் அவரால் சுட்டிக்காட்டப்பட்ட ஆலயம் நந்தீஸ்வரர் ஆலயம் என்று புகழ்பெற்றது. அது மட்டுமின்றி பிருங்கி முனிவர் அருள் அலைகள் இருந்ததால் அந்த மலையில் ஏராளமான சித்தர்கள் தவம் புரிந்தனர்.

    தங்களது தவத்தால் சித்தர் ஆற்றலை பெற்றவர்கள் ஏராளமானோர் அந்த மலையிலேயே ஜீவ சமாதி ஆனார்கள். அந்த வகையில் நூற்றுக்கணக்கான சித்தர்கள் உறைந்த இடமாக அந்த மலை கருதப்படுகிறது. ஏராளமான சித்தர் அங்கு ஆற்றல் பெற்ற பிறகு வேறு இடங்களுக்கு சென்று மக்களுக்கு சேவை செய்து ஜீவ சமாதி ஆகி இருக்கிறார்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜீவ சமாதிகளில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சித்தர்களில் பலர் இந்த மலையில் தவம் இருந்து ஆற்றல் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலையில் பிருங்கி முனிவருக்கு நந்தி வடிவில் காட்சி கொடுத்த ஈசனுக்காக உருவாக்கப்பட்ட ஆலயத்தை விஜயநகர மன்னர்களும், சோழ மன்னர்களும் திருப்பணிகள் செய்து மேம்படுத்தியதற்கான குறிப்புகளும், ஆதாரங்களும் உள்ளன.

    ஆதணி என்ற சோழ மன்னன் இந்த மலையில் இருந்த சிவாலயத்துக்கு திருப்பணி செய்ததால் அருகில் உள்ள இடம் அவனது பெயரால் ஆதம்பாக்கம் என்று அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். பிருங்கி முனிவர் தவம் இருந்து ஆற்றல் பெற்றதால் அந்த மலை பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு நாளடைவில் பேச்சு வழக்கில் பரங்கிமலை என்று ஆகிப்போனது. ஆனால் வெளி நாட்டவர்கள் வருகைக்கு பிறகு அந்த பெயரும் பறிபோனது. 1523-ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்கள் சென்னையை பிடித்த பிறகு இந்த மலையில் விரும்பி குடியேறினார்கள். 300 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது கிருஷ்ணர் ஆலயம் கட்டினார்கள். இதனால் அந்த மலைக்கு செயின்ட் தாமஸ் மலை என்ற பெயரும் ஏற்பட்டது. 1910-ம் ஆண்டுவரை இந்த மலை பிருங்கி மலை என்றே அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி வடிவில் காட்சி கொடுத்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதும் ஆதம்பாக்கத்தில் ஆவுடைய நாயகி சமேத நந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருமண வரம் தரும் இந்த ஆலயத்தின் முகப்பில் பிருங்கி முனிவருக்கு ஈசன் காட்சி அளித்த ஆலயம் என்று பொறிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலையில் தவம் இருந்தால் எவ்வளவு பெரிய சாபம் இருந்தாலும் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம் ஆகும். இதனால்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்தர்கள் இங்கு வந்து தியானம் செய்வதை பெரும் பேறாக கருதினார்கள். அவர்களில் முனுசாமி சித்தரும் ஒருவர் ஆவார். இவர் சென்னையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. முனுசாமி சித்தரின் ஜீவசமாதி பரங்கிமலையில் ஏதோ ஒரு பகுதியில் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். ஆனால் நீண்ட நாட்களாக அது கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது. சமீபத்தில் முனுசாமி சித்தர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பரங்கிமலையில் உள்ள மாகாளி அம்மன் ஆலயத்தில் தனி சன்னதியுடன் முனுசாமி சித்தர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அந்த சன்னதியை பொதுமக்கள் என்ன சன்னதி என்று தெரியாமலேயே கும்பிட்டு வந்துள்ளனர். மொட்டை பிள்ளையார் என்று யாரோ ஒருவர் சொன்னதை நம்பி அந்த பெயரிலேயே வழிபாடுகளும் நடந்துள்ளது. ஆனால் அந்த சன்னதியில் சுமார் ஒன்றரை அடி விக்கிரகத்துடன் இருப்பவர் முனுசாமி சித்தர் என்பது தெரிந்ததும், பலரும் ஆச்சரியமடைந்தனர். தற்போது முனுசாமி சித்தருக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சித்தர் ஆர்வலர்கள் அங்கு சென்று முனுசாமி சித்தரை வழிபட்டு வருகிறார்கள். முனுசாமி சித்தரின் ஜீவசமாதி என்று கருதப்படும் அந்தஇடம் மிக மிக சிறிய இடம். அந்த சிறிய சன்னதிக்குள் ஒரே ஒருவர் தான் நுழைய முடியும். அந்த ஒருவர் மட்டுமே அங்கு அமர்ந்து பூஜை செய்ய வசதி உள்ளது. வியாழக்கிழமைகளில் நிறைய பேர் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கார்த்திகை மாதம் முனுசாமி சித்தருக்கு குருபூஜை நடத்துகிறார்கள். முனுசாமி சித்தர் சென்னை பாலவாக்கத்தை பூர்வீகமாக கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதுபோல அவர் வைத்தியராக இருந்தவர் என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எப்படியோ முனுசாமி சித்தர் பரங்கிமலையில் வாழ்ந்தார் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. நூற்றுக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்த இந்த புண்ணிய மலையில் முனுசாமி சித்தரின் ஜீவசமாதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியதானாலும், கீர்த்தி பெரியது என்பார்களே அதுபோல இந்த சித்தரின் சன்னதி மிக மிக சிறியதாக இருந்தாலும், அருள் அலைகள் அடக்க முடியாத அளவுக்கு நிரம்பி வழிவது நிதர்சனமான உண்மையாகும். பூ, பழம் வைத்து நியாயமான கோரிக்கைகளை இவர் முன்பு சமர்ப்பித்தால் நிச்சயம் நிறைவேற்றி தருகிறார் என்பது முனுசாமி சித்தரின் சிறப்பாகும். நேரம் கிடைக்கும் போது பரங்கிமலைக்கு சென்றால் அந்த பலனை நீங்களும் பெற முடியும்.

    Previous Next

    نموذج الاتصال