No results found

    சென்னை சித்தர்கள்: யோகாம்பிகை- திருவேற்காடு


    சித்தர்கள், ஞானிகளில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிக குறைவாகும். அதிலும் மகான்களாக மாறும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். தமிழகத்தில் எத்தனையோ மகான்கள் பல்வேறு இடங்களில் அவதரித்து மக்களுக்கு நல்வழி காட்டி மறைந்திருக்கிறார்கள்.

    மகான்கள் அனைவருமே சித்த புருஷர்களுக்கு நிகரான ஆற்றல்களையும், மேம்பாடுகளையும் பெற்று ஓசையின்றி மக்களை நல்வழிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் சென்னையில் ஞானியாக வாழ்ந்து அற்புதங்கள் செய்தவர் யோகாம்பிகை அம்மையார்.

    இவரது ஆற்றல்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கும் நிகரற்ற அதிஷ்டானம் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்துக்கு எதிரே இந்த அதிஷ்டானம் இருக்கிறது. சாதாரணமாக அந்த இடத்தை கடந்து செல்லும்போது அது அதிஷ்டானம் என்பதை 99 சதவீத பக்தர்கள் தெரிந்து, புரிந்து கொள்வதில்லை.

    விஷயம் தெரிந்தவர்கள் அந்த அதிஷ்டானத்துக்குள் சென்று யோகாம்பி கையை வழிபட்டு தியானம் செய்து புண்ணிய பலன்களை சேர்த்துக் கொள்கிறார்கள். மகான்களை பொறுத்தவரை இறப்பு என்பது அவர்களது தேகத்துக்கு தானே தவிர ஆத்மாவுக்கு அல்ல. எனவேதான் அதிஷ்டானங்களில் மகான்களின் அருள் அலைகள் வந்துகொண்டே இருக்கும்.

    வாழ்க்கையில் எந்தவித ஆசையும் இல்லாமல் அனைத்து பற்றுகளையும் துறந்து மக்களுக்கு நல்வழி காட்டும் மகான்கள் அதே பண்பாடுகளை தங்கள் மறைவுக்கு பிறகும் தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள். எனவேதான் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிஷ்டானாங்கள் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளன.

    திருவேற்காட்டில் அமைந்துள்ள யோகாபிகை அம்மாள் அதிஷ்டானமும் அப்படி உயிர்ப்புடன் திகழும் அதிஷ்டானமாகும். யோகாம்பிகை அம்மாள் தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழிக்கும், திருப்பள்ளிக் காட்டுக்கும் இடையில் உள்ள அரிசந்திரா நதிக்கரையில் இருக்கும் ஆலகால ஈஸ்வரன் ஆலயத்தின் அருகில் உள்ள இல்லத்தில் பிறந்தவர்.

    பஞ்சநாத அய்யர்- பாகீரதி அம்மாள் தம்பதிக்கு 5-வது மகளாக பிறந்தவர். சிறு வயதிலேயே யோகாம்பிகை மிகுந்த தெய்வ பக்தியுடன் திகழ்ந்தார். எப்போதும் தெய்வ சிந்தனையிலேயே அவரது நாட்கள் கழிந்தன.

    ஒரு தடவை காஞ்சி சங்கராச்சாரியார் தஞ்சை பகுதியில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு இருந்தபோது அவர்களது இல்லத்துக்கும் சென்றார். சிறுமியாக இருந்த யோகாம்பிகையை ஆசீர்வதித்தார். அது அவரது ஆன்மிக பலத்ததை அதிகரிக்க செய்தது.

    அவருக்கு உரிய பருவத்தில் திருமணம் நடைபெற்றது. தஞ்சை மண்டலத்தில் புகழ்பெற்ற ஆனந்த தாண்டவபுரத்தை சேர்ந்த கல்யாணராம பாகவதர் இல்லத்துக்கு மருமகளாக சென்றார். கல்யாணராம பாகவதர் காசியில் சன்னியாசியாக விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்தவர். பல ஆண்டுகள் அங்கு மவுன விரதம் மேற்கொண்டு இறைபணி செய்து வந்தார்.

    1945-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று அவர் முக்தி அடைந்தார். அவரது வழியில் வந்த யோகாம்பிகையும் தன்னை முழுமையாக ஆன்மிகத்தில் ஒப்படைத்தார். சென்னை திருமுல்லைவாயலில் உள்ள வைஷ்ணவி ஆலயத்தில் தங்கி இருந்து ஆன்மிக பணிகள் செய்து வந்தார்.

    இவரது சகோதரர் சாதுராம் சுவாமிகளும் அங்குதான் இருந்தார். அருட்கவி என்று புகழப்பட்ட சாதுராம் சுவாமிகள் கணக்கில் அடங்காத பாடல்கள் எழுதியவர். நூற்றுக் கணக்கானவர்களை ஆன்மிக பாதையில் பயணிக்க வைத்த அவரது சகோதரியும் ஆன்மிக பாதையில் கலங்கரை விளக்கமாக மாறியது வியப்புக்குரியது அல்ல.

    அந்த வகையில் அவர்களது குடும்பத்தையே ஆன்மிக குடும்பமாக சொன்னால் மிகையாகாது. அதனால் தான் யோகாம்பிகையால் மிக இளம் வயதிலேயே ஆன்மிகத்துக்குரிய அத்தனை பக்குவங்களையும் எளிதில் பெற முடிந்தது. திருமுல்லைவாயல் வைஷ்ணவி ஆலயத்தில் தங்கி இருந்து ஆன்மிக பணிகளை மேற்கொண்டு இருந்தபோதுதான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

    ஒருநாள் இரவு அவரது கனவில் திருவேற்காடு கருமாரி அம்மன் தோன்றி சில உத்தரவுகளை பிறப்பித்தார். 'நீ என் அருகில் இருந்து செய்ய வேண்டிய பணிகள், சேவைகள் ஏராளம் உள்ளன. எனவே திருவேற்காட்டுக்கு புறப்பட்டு வா. உனது இருப்பிடம் இனி திருவேற்காடுதான்' என்று கருமாரி அம்மன் கூறினாள்.

    இதையடுத்து யோகாம்பிகை அம்மாள் திருமுல்லைவாயலில் இருந்து திருவேற்காடுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தனக்கென தனி இடத்தை உருவாக்கி அமர்ந்து ஆன்மிக பணிகளை தொடர்ந்தார். தை மாதம் பவுர்ணமி தினத்தன்று அவரை மிகப்பெரிய நல்ல பாம்பு சுற்றி வந்தது. பிறகு அவரது தலை மீது படம் எடுத்து நின்று காட்சி கொடுத்தது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு யோகாம்பிகை அம்மாள் பல அபூர்வ ஆற்றல்களை பெற்றிருந்தார். அவரது ஆன்மிக சேவையில் பல உன்னதமான மாற்றங்கள் ஏற்பட்டது. ஏராளமானோர் யோகாம்பிகை அம்மாள் காட்டிய வழியில் நடக்கத் தொடங்கினார்கள். அவர்களிடம் ஆசி பெறுவதற்காகவே தினமும் பலர் திருவேற்காடு வந்து சென்றனர்.

    கடும் விரதம் இருந்து தனது ஆத்ம ஞானத்தை மேம்படுத்திக் கொண்ட யோகாம்பிகை அம்மாள் அடிக்கடி தன்னை நாடி வருபவர்களிடம் வாழ்க்கை தத்துவங்களை மிக எளிமையாக சொல்லிக் கொடுப்பது உண்டு. ஆத்மாவை பலப்படுத்திக் கொள்வது எப்படி என்பதை தனக்கே உரிய பாணியில் அவர் தெளிவுப்படுத்த தவறியதே இல்லை.

    தினசரி வாழ்வியல் நடவடிக்கைகளுடன் அவரது ஆன்ம வழிகாட்டுதலும் சேர்ந்ததால் பலரும் ஒரு நல்ல நிலைக்கு மேம்பட்டனர். அப்படி மேம்பட்டவர்களில் தனக்கு நெருக்கமானவர்களிடம் யோகாம்பிகை அம்மாள் சித்தாடல்கள் கூட செய்து காட்டியது உண்டு. ஆனால் விளம்பரத்துக்காக அவர் எந்த ஆன்மிக நிகழ்ச்சிகளையும் செய்ததில்லை. இப்படி தனித்துவமாக வாழ்ந்த யோகாம்பிகை அம்மாள் 1967-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி தனது ஆத்மாவை உடலில் இருந்து பிரித்துக்கொண்டார்.

    என்றாலும், அவரது ஆடைகள், திருமாங்கல்யம், மெட்டி போன்றவை அபூர்வமாக கிடைத்தன. இதையடுத்து அந்த பொருட்களுடன் பூவாடை கலசம் உருவாக்கப்பட்டது. அதைக் கொண்டு திருவேற்காட்டில் யோகாம்பிகை அம்மாள் அதிஷ்டானத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அதிஷ்டானம் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் எதிர்புறத்திலேயே அமைந்துள்ளது.

    அப்போதைய தர்மபுரம் ஆதீனம் சோமசுந்தர தம்பிரான், கிருபானந்த வாரியார், கி.வ.ஜா., பக்தவச்சலம், ஓ.வி.அழகேசன் உள்பட பலர் அந்த அதிஷ்டானத்துக்கு வந்துள்ளனர். கிருபானந்த வாரியார் பல தடவை இந்த அதிஷ்டானத்துக்கு வந்துள்ளார். அங்கு அவர் சங்கு ஸ்தாபனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த அதிஷ்டானத்தில் அம்பாள் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவமைத்து எடுத்துவரப்பட்டு அந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. 1971-ம் ஆண்டு அந்த அதிஷ்டானம் கட்டி நிறைவு செய்யப்பட்டு தருமை ஆதீனம் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அன்று முதல் அந்த அதிஷ்டானத்தில் சண்டி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றுவரை ஆண்டு தவறாமல் அந்த அதிஷ்டானத்தில் சண்டி ஹோமம் நடத்தப் படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டால் பல அபூர்வ பலன்களை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும்.

    புதுக்கோட்டை சித்தர் சாந்தானந்த சுவாமிகள் இந்த அதிஷ்டானத்தில் மகாமேரு எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். அதுபோல சிருங்கேரி சங்கராச்சாரியார் வழங்கிய ஆதிசங்கரர் சிலையும் இந்த அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்த அதிஷ்டானம் அருள் அலைகள் நிரம்பி காணப்படுகிறது. இந்த அதிஷ்டானத்தில் தியானம் செய்வதற்கு அருமையான வசதிகள் உள்ளன. அமைதியான சூழ்நிலை எப்போதும் காணப்படுகிறது. இதனால் இங்கு தியானம் செய்தால் மிக எளிதில் மனதை ஒருநிலைப் படுத்த முடிகிறது.

    தற்போது இந்த அதிஷ்டானத்தில் சீரமைப்பு திருப்பணிகள் நடந்து வருகின்றன. திருவேற்காடுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது யோகாம்பிகை அம்மாள் அதிஷ்டானத்துக்கும் சென்று வாருங்கள். யோகங்களை நிச்சயம் அள்ளித் தருவாள்.

    இதை நாங்கள் சொல்லவில்லை. மறைந்த பிரபல வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதனே சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி இந்த அதிஷ்டானத்துக்கு வருவதுண்டு. அங்கு வந்த பிறகுதான் அவருக்கு பல்வேறு முக்கிய வாய்ப்புகள் வந்ததாக சொல்லி இருக்கிறார்.

    தன்னை சிறப்பித்து இசை பேரறிஞர் உள்பட பல்வேறு பட்டங்கள் வந்ததற்கு இந்த அதிஷ்டானத்தில் காலடி எடுத்து வைத்ததே காரணம் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார். இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

    யோகாம்பிகை அம்மாள் அதிஷ்டானம் தொடர்பாக மேலும் தகவல்களை 9445109206 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.

    Previous Next

    نموذج الاتصال