No results found

    சென்னை சித்தர்கள்: சபாபதி சுவாமிகள்- மயிலாப்பூர்


    வட சென்னையில் திருவொற்றியூர் எப்படி சித்தர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறதோ அதேபோன்று தென் சென்னையில் மயிலாப்பூர் சித்தர்களின் மையமாக உள்ளது. தொண்மை காலத்தில் இருந்தே மயிலாப்பூர் சிறப்பான ஆன்மீகத் தலமாக உருவாகி இருந்தது. பல்லவர்கள் இதை கடற்கரை பட்டினமாக உருவாக்கி சிறப்பு செய்தனர்.

    சோழர்கள் காலத்தில் சென்னை கடலோரத்தில் மயிலாப்பூரில் மிக பிரமாண்டமான சிவாலயம் உருவானது. சுந்தரர் அதை மிகவும் சிறப்பித்து பாடி உள்ளார். அங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் புனித யாத்திரை வரும் அளவுக்கு அந்த சிவாலயம் புகழ் பெற்று இருந்தது.

    அந்த சிவாலயத்தை சுற்றி ஏராளமான சித்தர்கள் குடில்கள் அமைத்து தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.

    பார்வதி தேவி மயில் வடிவம் எடுத்து தவம் இருந்து சிவபெருமானை சேர்ந்த இடம் என்பதால் அந்த பகுதிக்கு "மயிலாப்பூர்" என்ற பெயர் ஏற்பட்டது. மயிலாப்பூருக்கு புராணங்களில் தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புடைய அந்த சிவாலயம் வெளிநாட்டவர்களின் வருகையின்போது இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

    முதலில் போர்ச்சுக்கீசியர்கள் சூறையாடினார்கள். பிறகு ஆங்கிலேயர்கள் அழித்தனர். இதனால் அந்த சிவாலயம் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. என்றாலும் மக்கள் மனதில் கபாலீஸ்வரர் நினைவு இருந்து கொண்டே இருந்தது. இதனால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்று ஆலயத்தை தற்போது மயிலாப்பூர் இருக்கும் இடத்தில் கட்டியுள்ளனர்.

    இந்த ஆலயமும் கடற்கரையில் இருந்த ஆலயத்துக்கு நிகரான புனிதத்தை பெற்றுள்ளது. மயிலாப்பூர் ஆலயத்தை சுற்றி ஏராளமான சித்தர்கள் தவம் இருந்து ஈசனை வழிபட்டு சிறப்பு சேர்த்துள்ளனர். நந்தி தேவர், 'பூவுலகில் கைலாயத்துக்கு இணையான தலம் இது' என்று சிறப்பித்துள்ளார்.

    பதஞ்சலி, தாயுமானவர், சுந்தரர், சட்டை முனி சித்தர், சதாசிவ பிரம்மம், அழுகுணி சித்தர் என்று ஏராளமான சித்தர்கள் மயிலாப்பூர் சிவாலயத்தை புகழ்ந்து குறிப்புகள் தெரிவித்துள்ளனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு சித்தரும் தங்களது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    அதன் தொடர்ச்சியாக சில நூறு ஆண்டுகளுக்கு முன்பும் பல்வேறு சித்தர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தை சுற்றி குடில்கள் அமைத்து தியானம் இருப்பதை வழக்கத்தில் வைத்திருந்தனர். இதனால் அவர்களுக்கு ஈசனின் அருளால் மிக எளிதாக ஆத்ம ஞானம் கிடைத்தது. மிக உயர்ந்த மேன்மையான சித்தர்களாக அவர்களால் மாற முடிந்தது.

    மயிலாப்பூரில் மேன்மை பெற்ற சித்தர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு சேவை செய்தனர். இறுதியில் ஆங்காங்கே பரிபூரணமாகி விட்டனர். அவர்கள் முக்தி பெற்ற இடங்களில் ஜீவ சமாதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு சித்தர் நிலையில் தொடக்கமாக அமைந்தது மயிலாப்பூர் தலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அருகே 2 புனித குளங்கள் உள்ளன. தெற்கு மாடவீதி பக்கம் இருப்பது தற்போது சித்திரை குளம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் அது சித்தர் குளம் என்றுதான் பெயர் பெற்று இருந்தது. நாளடைவில் பேச்சு வழக்கில் சித்திரை குளம் என்றாகி விட்டது. அந்த புனித குளத்தை சுற்றி ஏராளமான சித்தர்கள் தவம் இருந்து மேன்மை பெற்று இருக்கிறார்கள்.

    அவர்களில் சபாபதி சுவாமிகளும் ஒருவர் ஆவார். இவரது ஜீவ சமாதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தின் தெற்கு மாட வீதியில் ஆதம் தெருவில் அமைந்துள்ளது. தெற்கு மாட வீதியில் கற்பகம் விடுதி என்றால் அனைவருக்கும் மிக எளிதாக தெரியும். அந்த விடுதியின் பின் பக்கம் கார்கள் நிறுத்தும் இடத்துக்கு அருகே அந்த ஜீவ சமாதி அமைக்கப்பட்டுள்ளது. கற்பகம் விடுதி நுழைவாயில் வழியாகவும் அந்த ஜீவசமாதிக்கு செல்லலாம். ஆதம் தெரு வழியாகவும் அந்த ஜீவ சமாதிக்கு செல்ல முடியும். அது ஜீவ சமாதி ஆலயம் என்பதுகூட மயிலாப்பூரில் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது. அந்த ஜீவ சமாதி ஆலயத்தில் பிரதான சன்னதியில் லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரை அண்ணாமலையார் என்ற திருநாமத்தில் அழைக்கிறார்கள். இதனால் அது அண்ணாமலையார் கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. மிக மிக குறுகிய இடத்தில் இந்த அண்ணாமலையார் ஆலயம் இருக்கிறது. கருவறையை சுற்றி ஒரே ஒரு பிரகாரம் தான். அந்த சிறிய பிரகாரத்தை சுற்றி வரும்போது ஒரு ஓரத்தில் சபாபதி சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஜீவ சமாதி என்பதால், சிறிய பள்ளத்துக்குள் அது அமைந்திருக்கிறது.

    அங்கும் லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த சிறிய சன்னதி முகப்பிலும் "அண்ணாமலையார்" என்றே எழுதி உள்ளனர். இதனால் பக்தர்கள் அனைவரும் அதை அண்ணாமலையாராக கருதி வழிபடுகிறார்கள். உண்மையில் அது சித்தரின் ஜீவசமாதி என்பது சிலருக்கே தெரிகிறது. தினமும் அந்த ஜீவ சமாதியில் காலை, மாலை இரு நேரமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆனால் அங்கு உறைந்துள்ள சித்தரை பற்றிய தகவல்கள் யாருக்கும் இதுவரை தெரியாதது துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

    திருவண்ணாமலை ஆதினம் இந்த ஜீவ சமாதியை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் சில சித்தர்களின் ஜீவ சமாதியை மிக மிக சிறப்பான முறையில் திருவண்ணாமலை ஆதினம் பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த ஆதினத்தில் உள்ளவர்களுக்கும் மயிலாப்பூரில் இருக்கும் இந்த சித்தர் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியவில்லை.

    சிலர் மட்டும் அவர் திருவண்ணாமலை ஆதினங்களில் ஒருவராக இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதிலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. திருவண்ணாமலை ஆதினம் என்பது தமிழகத்தில் உள்ள ஆதினங்களில் மிக மிக பழமையான ஆதினங்களில் ஒன்றாகும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேசுவரரால் அருள் பாலிக்கப்பட்ட தெய்வ சிகாமணி தேசிக குருமூர்த்திகள் என்பவரால் இந்த ஆதினம் தொடங்கப்பட்டதாகும்.

    முதலில் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டதால் அந்த ஆதினம் திருவண்ணாமலை ஆதினம் என்று பெயர் பெற்றது. அதன் பிறகு அது பிரான்மலைக்கு இடம்பெயர்ந்து அதன்பிறகு காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் நிலைபெற்றது. தற்போது குன்றக்குடியில் இந்த ஆதினத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

    அந்த ஆதின தகவல்படி ஆதினங்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் சித்தராக மாறி இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் ஆய்வு செய்தால் 4-வது ஆதினத்தின் பெயர் கனக சபாபதி தேசிகர் என்று வருகிறது. அவர்தான் மயிலாப்பூரில் சித்தராக அருள் பாலித்து வரலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

    சிலர், '27-வது ஆதினமான அண்ணாமலை தேசிகர் அல்லது 36- வது ஆதினமான அருணாச்சல தேசிகர் ஆகிய இருவரில் ஒருவர் என்றும் அங்கு அவர் முக்தி பெற்றிருக்கலாம்' என்றும் சொல்கிறார்கள். இதனால்தான் அந்த ஆலயத்துக்கு அண்ணாமலையார் ஆலயம் என்று பெயரிட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    இவற்றில் எது உண்மை. எது சரி, எது தவறு என்று நமக்கு தெரியாது. ஆனால் அந்த இடத்தில் பரிபூரணமாகி இருக்கும் சித்தர் நிகரற்ற ஆற்றல் பெற்றவர் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். அவரது அருள்அலை அந்த ஜீவ சமாதியில் பொங்கி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அவர் ஜீவ சமாதி அருகில் சென்றாலே மனதுக்குள் அமைதி வந்து குதூகலம் அடைவதை உண்மையிலேயே உணர முடியும். நிறைய பேர் இந்த சித்தர் பற்றி நதி மூலம், ரிஷிமூலம் தெரியா விட்டாலும் அவரை வணங்கி தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்துகூட அந்த சித்தர் ஜீவ சமாதிக்கு வந்து செல்கிறார்கள். அந்த ஜீவ சமாதி முன்பு தியானம் செய்ய ஒரளவு இட வசதி இருக்கிறது.

    யார் ஒருவர் அங்கு மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்கிறாரோ அவருக்குள் ஓரிரு நிமிடங்களில் அந்த சித்தர் ஊடுருவ ஆரம்பித்து விடுகிறார். ஆழ்நிலை தியானத்துக்குள் செல்லும்போது அந்த சித்தரின் பரிபூரண ஆசி கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள். சிலர் மணி கணக்கில் தியானம் செய்து அந்த ஆனந்த அனுபவத்தை பெற்று செல்கிறார்கள்.

    இவை மட்டுமின்றி இல்வாழ்க்கைக்கு தேவையான என்ன கோரிக்கைகள் வைத்தாலும் அந்த சித்தர் நிறைவேற்றி தருகிறார் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது. பெயர் தெரியாமலேயே இந்த சித்தர் தன்னை நாடி வரும் ஒவ்வொருவரையும் நாடி பிடித்து பார்த்து மேன்மை அடையச் செய்கிறார் என்பது உண்மையாகும். அதை உணர நீங்களும் ஒரு தடவை மயிலாப்பூர் சென்று வாருங்கள்.

    Previous Next

    نموذج الاتصال