No results found

    நீங்கள் பிறந்த தேதியும் உங்களுக்கான அதிர்ஷ்ட நாள்களும்! #Nuemerology


    பெரும்பாலும் ஒருவர் எந்த தேதியில் பிறந்தாரோ அந்த தேதி எண்ணே அவருக்கு உரிய ஆதிக்க எண்ணாகும். இதன் அடிப்படையில் உங்களுக்கான அதிர்ஷ்டக் குறிப்புகளை எடுத்துச் சொல்கிறது எண்கணித ஜோதிடம்!

    ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் போன்று மனிதனின் எதிர் காலத்தை நிர்ணயிக்க எண்கணிதமும் பெரிதும் உதவுகிறது. அந்த வகையில், ஆதிக்க எண் அடிப்படையில் ஓவ்வொருவருக்குமான அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறங்கள், அதிர்ஷ்ட ரத்தினங்கள் முதலான அதிர்ஷ்டக் குறிப்புகளை ஆன்றோர்கள் தொகுத்து வழங்கியுள்ளனர்.

    ஆதிக்க எண்ணை அறிவது எப்படி?

    பெரும்பாலும் ஒருவர் எந்த தேதியில் பிறந்தாரோ அந்த தேதி எண்ணே அவருக்கு உரிய ஆதிக்க எண்ணாகும். உதாரணமாக ஒருவர் பிறந்தது 4-ம் தேதி எனில், அவரின் ஆதிக்க எண் 4. பிறந்த தேதி 22 என்றாலும் (2+2) ஆதிக்க எண் 4-ஆக அமையும். இந்த அடிப்படையில் நீங்கள் உங்களுக்கான ஆதிக்க எண்ணை அறிந்து கொள்ள இயலௌம்.

    இனி, உங்களின் பிறந்த தேதி அடிப்படையில் ஆதிக்க எண்ணைக் கொண்டு, உங்களுக்கான அதிர்ஷ்டக் குறிப்புகளைத் தெரிந்துகொள்வோமா?

    1, 10, 19, 28:

    இந்தத் தேதிகளில் பிறந்த அன்பர்கள், எண் 1-ஐ ஆதிக்க எண்ணாகக் கொண்டிருப்பார்கள். இந்த எண்ணில் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சூரியதேவன். உலக இயக்கத்துக்குச் சூரிய சக்தி எப்படி அவசியமோ, அப்படியே இந்தத் தேதிகளில் பிறந்த அன்பர் களின் பணிகள் எல்லோருக்கும் தேவையுள்ளதாக அமையும் விதமாக இவர்களின் செயல்பாடுகள் அமையும்; இவர்கள் எங்கு சென்றாலும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்வார்கள்.

    எல்லோராலும் மதிக்கத் தக்க இடத்தில் ஆளுமையுடன் திகழும் இந்த அன்பர்கள், மனதில் உள்ளதை உள்ளபடி பேசுவார்கள்; ஒளித்து மறைத்துப் பேசத் தெரியாது. அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இவர்களிடம் காணப்படும். ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், எப்படியும் சாதித்துக் காட்டுவார்கள்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள்கள். இந்தத் தேதிகளில் சந்தோஷம் தரும் சம்பவங்கள் நடைபெறும். இந்த தேதிகளில் முதல் மூன்று மிகவும் உத்தமம். மேற்காணும் தேதிகளில் பிறந்த அன்பர்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்; வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: எண் 1-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்களுக்கு, மஞ்சள் நிறம், பொன்னிறம் அதிர்ஷ்டம் தரும்; கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்களைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட ரத்தினம்: மாணிக்கம்

    பலன் தரும் வழிபாடு: பிரதோஷ தினங்களில் சிவாலயங்களுக்கு அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக் கொடுக்கலாம். உழவாரப் பணிகளில் கலந்துகொண்டால், வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

    2, 11, 20, 29:

    இந்தத் தேதிகளில் பிறந்த அன்பர்கள் 2-ம் எண்ணால் ஆளப் படுகிறார்கள். இது ஜல தத்துவத்தைக் குறிக்கும். சந்திர கிரகத்துக்கு உரிய எண். சந்திரன் மனதை ஆள்பவர். ஆகவே, இந்த தேதிகளில் பிறந்தவர்கள், மனோதிடம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

    ஜாதகப்படி சந்திரன் சுப பலம் பெற்றிருந்தால் நல்லவிதமாகவும், சந்திரனின் ஆதிக்கம் குறைந்து காணப்பட்டால் எதிர்மறையாகவும் விமர்சனங்களைச் சந்திப்பார்கள். மனோசக்தி மிகுந்தவர்களாதலால், தீவிரமான கற்பனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுவர். தெய்வ அனுக்ரஹம் உடையவர்கள். நம்பிக்கையாலேயே எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்துவிடுவார்கள். மிக எளிய நிலையிலிருந்து அயராத முயற்சியால் உயர்நிலையை அடைவார்கள்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 7,16,25 தேதிகள் மிக்க அதிர்ஷ்டமான தினங்கள். இந்தத் தினங்களில் செய்யப்படும் காரியங்களில் தகுதிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும். 8, 9, 18, 26 ஆகிய தேதிகள் அனுகூலம் இல்லாதவை.

    அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் பச்சை வண்ணம் அதிர்ஷ்டம் தரும். ஆடைகள், வீட்டுச் சுவரின் வர்ணம் இந்த வண்ணத்தில் இருந்தால் உற்சாகமும் அமைதியும் உண்டாகும். கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். அதிர்ஷ்ட ரத்தினம்: முத்து

    பலன் தரும் வழிபாடு: சதுர்த்தி தினங்களில் மோதகம் படைத்து அருகம்புல் சாத்தி விநாயகரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். விநாயகருக்கு அபிஷேகிக்க பால் வாங்கிக் கொடுக்கலாம்.

    3, 12, 21, 30:

    இந்தத் தேதிகளில் பிறந்த அன்பர்கள் 3-ம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்கள். நவகிரகங்களில் குரு இந்த எண்ணில் ஆதிக்கம் செலுத்துவார். இவர்களில் பெரும்பாலானோர் தலைவர்களாகப் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களுடைய பரோபகார சிந்தையும், தேச முன்னேற்றத்திலுள்ள ஆர்வமுமேயாகும். சில அன்பர்கள் வங்கிப் பணியாளர்களாகவும், ஆசிரியராகவும் இருப்பார்கள். கலைகளை ரசிப்பார்கள். வாழ்க்கை கௌரவமாகவும், உயர்வாகவும் அமையும். மத்திம வயதுக்கு மேல் புகழ் உண்டாகும். இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 3, 9, 12, 18, 21, 27, 30 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். இந்த தேதிகளில் முடிவெடுக்கப்படும் விஷயங்கள் வெற்றியில் முடியும். 6, 15, 24 ஆகிய தேதிகளைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் சிவப்பு மற்றும் செந்நிறம் இவர்களுக்கு நன்மை தரும். கருநீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை ஆகியவற் றைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட ரத்தினம்: புஷ்பராகம்

    பலன் தரும் வழிபாடு: தென்முக தெய்வமாம் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமைகளில் இந்த ஸ்வாமிக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்; ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும்; சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

    4, 13, 22, 31:

    இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் 4-ம் எண்ணை ஆதிக்க எண்ணாகக் கொண்டவர்கள். ராகு ஆதிக்கம் செலுத்தும் எண் இது. அறிவு, மனம், இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சக்திகொண்ட இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலரும் வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுடன் வாதம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவரே. பேச்சால் காரியம் சாதிப்பார்கள். தன்னைச் சார்ந்தோரை முன்னேற வைப்பதிலும் இவர்கள் கில்லாடிகள்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் புதிய காரியங்கள் செய்ய வேண்டாம்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள். இவர்கள் அடர்த்தியான நிறங்களைத் தவிர்க்கலாம். அதிர்ஷ்ட ரத்தினம்: கோமேதகம்

    பலன் தரும் வழிபாடு: துர்கை வழிபாடு நன்மை அளிக்கும். பெளர்ணமி தினங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் பூஜையறையில் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து துர்கையை வழிபடலாம். கோயில்களில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வணங்கலாம். அந்த அன்னையின் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும்.

    5, 14, 23:

    இந்தத் தேதிகளில் பிறந்தோர் 5-ம் எண்ணின் ஆதிக்கத் தில் வருவர். புதன் கிரகம் ஆளுமை செலுத்தும் எண் இது. மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை சாதாரண நிலையில் ஆரம்பித்தாலும், விரைவிலேயே முக்கியப் பிரமுகராகி புகழ் பெறுவர்.

    இந்த எண்ணில் பிறந்த அன்பர்களில் பலரும் தொழிலதிபர்களாக பிரகாசிக்கிறார்கள். இவர்களில் சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, மற்றவர்களுக்குக் குருவாகவும் திகழ வாய்ப்பு உண்டு. பயணம் செய்வதிலும், பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஊக்கமும் பிடிவாதமும் சரிசமமாக இவர்களிடம் காணப்படும். பொருள்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு

    அதிர்ஷ்ட தேதிகள்: இவர்களுக்கு எல்லா நாள்களுமே நல்ல பலன்களைத் தரும் எனலாம். குறிப்பாக 5, 9, 14, 18, 23, 27 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் தரும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: சாம்பல் வண்ணம் நல்லது; பச்சை, கறுப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களைத் தவிர்த்துவிடவும். அதிர்ஷ்ட ரத்தினம்: மரகதம்.

    பலன் தரும் வழிபாடு: வாய்ப்பு இருந்தால் குடும்பத்துடன் திருவேங்கடவனை தரிசித்து வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று துளசி சமர்ப்பித்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரலாம்.

    6, 15, 24:

    இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் 6-ம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். சுக்கிரன் ஆளும் எண் இது. எல்லோரையும் வசப்படுத்தி ஆளும் திறமை கொண்டவர்கள். அதேபோல், மற்றவர்களை வசப்படுத்தி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள இவர்கள், அதிகாரப் பதவிகளில், ஆளுமையான ஸ்தானங்களில் இருப்பார்கள். நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். இவர்களில் சிலர் ஆன்மிகத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 6, 15, 24 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் தரும். குருவின் ஆதிக்கம் கொண்ட 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் சுப காரியங்களைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: கரும்பச்சை, கருநீலம், நீலம், பச்சை மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்கள் அதிர்ஷ்டமானவை. வெள்ளை, மஞ்சள், வெளிர் சிவப்பு நிறங்களைத் தவிர்க்கவேண்டும். அதிர்ஷ்ட ரத்தினம்: வைரம் அல்லது மரகதம்.

    பலன் தரும் வழிபாடு: வெள்ளிக் கிழமைகளில் நெய்தீபங்கள் ஏற்றி வைத்து, லட்சுமிதேவியை வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்டால், சகல சுகபோகங்களும் உண்டாகும்.

    7, 16, 25:

    இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள், 7-ம் எண்ணின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இந்த எண்ணின் அதிபதி ஞானகாரகனாகிய கேது என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்த அன்பர்களுக்கு இயல்பிலேயே தெய்வ பக்தியும், ஆன்மிகத்தில் நாட்டமும் இருக்கும். ஆனாலும், இவர்கள் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் தவறான சேர்க்கையால் பெயரைக் கெடுத்துக்கொள்ளவும் கூடும். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருப்பர். புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். எனினும் வாழ்வில் சிற்சில தடைகள் ஏற்படவே செய்யும்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20, 29 ஆகிய நாள்கள் வெற்றி தரும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் புது முயற்சிகள் வேண்டாம்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை சிறப்பானது. வெளிர் மஞ்சள், வெளிர் பச்சை போன்றவையும் நன்று. அடர்த்தியான நிறங்களைத் தவிர்க்கவேண்டும். அதிர்ஷ்ட ரத்தினம்: வைடூரியம்

    பலன் தரும் வழிபாடு: கேதுவின் ஆதிக்கம் கொண்ட 7-ம் எண் காரர்கள் விநாயகரைச் சிக்கென பிடித்துக்கொள்ளலாம். ஆனை முகனின் அருள் இருக்க அல்லல்கள் இல்லை. எறும்புகளுக்கு வெல்லம் கலந்த பச்சரிசியை உணவாக இட்டு வாருங்கள்; எண்ணங்கள் ஈடேறும்.

    8, 17, 26:

    இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் 8-ம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்கள். கடுமையாக உழைப்பார்கள். உழைப்புக்கு ஏற்ற உயர்வும் உண்டு. பொதுவாக பலரும் இந்த எண்ணை அதிர்ஷ்டம் இல்லாத எண் என்றே சொல்வார்கள். ஆனால், இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலர் சமூகத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த எண்ணின் அதிபதி சனிபகவான் என்பதால், மற்றவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பிலும், நீதித் துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் சிறப்பு தரும். 8, 17, 26 ஆகிய தேதிகளைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கரும்பச்சை சிறப்பு. கறுப்பு, பாக்கு நிறம் ஆகியற்றைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட ரத்தினம்: நீலம்

    பலன் தரும் வழிபாடு: சனிக்கிழமைகளில் வெண்ணெய் சமர்ப் பித்து, வெற்றிலை மாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

    9, 18, 27:

    இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் 9-ம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்கள். சாதிக்க வைக்கும் எண் இது. செவ்வாயின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இந்த எண்ணில் பிறந்தவர்களுக்குக் கோபம் அதிகம் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள நினைத்து அதில் வெற்றியும் காண்பார்கள். இவர்களில் பலரும் காவல், ராணுவம் போன்ற துறைகளில் சாதனைகள் புரிந்து புகழ் அடைவார்கள்.

    இவர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், நன்மை ஏற்படும். பூர்வ புண்ணியத்தின் பயனாக தெய்வ அனுகூலம் இவர்களுக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும். மற்றவர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்புகள் இவர்களைத் தேடிவரும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், வெகு விரைவில் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுவார்கள்.

    அதிர்ஷ்ட தேதிகள்: 5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் தரும். 2,11,20,29 ஆகிய தேதிகளைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம் ஆகியவை சிறப்பு. வெளிர் பச்சை மற்றும் வெண்மை நிறங்களைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட ரத்தினம்: பவளம்.

    பலன் தரும் வழிபாடு: செவ்வாய்க் கிழமைகளிலும் சஷ்டி தினங்களிலும் பஞ்சாமிர்தம் படைத்து முருகப்பெருமானை வழிபடுங்கள். தினமும் குடும்பத்துடன் குமார ஸ்தவம் பாடி வழிபடுவதால், நீங்கள் கையில் எடுக்கும் சகல காரியங்களும் வெற்றியில் முடியும்.

    Previous Next

    نموذج الاتصال