No results found

    மேல்மலையனூர் கோவில் புற்று உருவான வரலாறு


    மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்டது. அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி “தாண்டவஈஸ்வரனாகவும்” தாண்டிய இடமான மேல்மலையனூரில் “தாண்டேஸ்வரராகவும்” அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானவிட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.

    இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.

    இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன. அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.

    அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை. இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.

    கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது. அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும்.

    நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான அம்காளம் அம்மன் ஸ்ரீ அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    Previous Next

    نموذج الاتصال