No results found

    அதிசயங்கள் பல புரியும் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயம்


    அன்னையின் மகிமையைப் பறைசாற்றும் திருத்தலங்களில் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன் மைத்திருத்தலமும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலத்தின் வரலாறு தனிச்சிறப்பு மிக்கது. கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களின் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார். அவர் இன்றைய கேரளப் பகுதியில் கிறிஸ்தவ சபைகளை உருவாக்கியதோடு தமிழகத்தின் தென் பகுதிகளிலும் சபை களை ஏற்படுத்தினார்.

    அக்காலத்தில் மணல் மாதா கோவிலை உள்ளடக்கிய பகுதியான வீரநாடு என்று அழைக்கப்பட்டது. இந்நாட்டு மன்னனின் மனைவி, மகளை தீய ஆவியின் பிடியில் இருந்து குணமாக்கி இப்பகுதியில் கிறிஸ்தவ ஒளியை ஏற்றி வைத்தார். இம்மக்களுக்கென்று மாதா குருசடி அமைத்து இறைவனை வழிபட வகை செய்தார். பின்னர் இம்மக்களை மலபார் சபையினரும், வெளிநாட்டு அர்மேனிய சபையினரும் வழி நடத்தி வந்தனர். கி.பி. 1325-ல் கணக்கன்குடியிருப்பு என்ற இவ்வூரில் வாழ்ந்த ஒரு பக்தர் கனவில் அன்னை மரியாள் தோன்றி ஆலயம் அமைக்க கேட்டுக் கொண்டார். பக்தரும் மக்கள் ஒத்துழைப்போடு அன்னைக்கு அழகிய சிறிய ஆலயம் அமைத்துத் தந்தார்.

    கி.பி. 1339-ல் போப்புவின் தூதுவராக இந்திய கிறிஸ்தவர்களை சந்திக்க வந்த ஜியோ வான்னி மரிஞ்ஞோலி ஆயர் அவர்கள் மாதாவின் சுரூபத்தை வடிவமைத்து ஸ்தாபித்தார். மாதாவின் சொரூபம் சந்தன மரமும், யானைத்தந்தமும் இணைத்து பழங்கால அமைப்பில் அழகுடனும் உயரத்தில் சிறியதாகவும் செய்யப்பட்டுள்ளது (இச்சுரூபமே இன்று மணல் மாதாவாக போற்றப்படுகிறது). கி.பி. 1542-ல் இவ்வாலயம் வந்த புனித சவேரியார் இங்கு இறந்த ஒருவனுக்கு உயிர் கொடுத்து அன்னையின் புகழைப் பரவச் செய்தார். கி.பி. 1597-ல் இப்பகுதியை அரசூர் மன்னன் துறவிப்பாண்டியன் ஆண்டு வந்தார். அவர் கணக்கன்குடியிருப்பில் வாழ்ந்து வந்த ஏழை விதவைப் பெண்ணை வீண்பழி சுமத்தி, கொலை செய்ய தீர்ப்பளித்தார். அபலையின் சாபம் அகிலத்தை அதிரவைத்தது. பெரும் சூறாவளி வீசியது. மண்மாரி பொழிந்தது. ஊரே அழிந்தது. அத்தோடு அன்னையின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. அவ்வழிவுக்குப்பின் அப்பகுதி கொடிய விலங்குகள் வாழும் வனாந்தரமாக மாறிப் போனது.

    கி.பி. 1798-ல் இக்காட்டில் கால்நடைகள் மேய்த்து வந்த ஒருவன் காலில் தடுக்கிய சிலுவையைக் கண்டு சொக்கன்குடியிருப்புக்கு வந்து உரைத்தான். அக்காலம் சொக்கன்குடியிருப்பு வடக்கன்குளம் பங்கோடு இணைந்திருந்தது. பங்குதந்தை கிளமெண்ட் தொமாசினி தலைமையில் சொக்கன் குடியிருப்பு மக்கள் ஒன்று திரண்டு மணலுக்குள் புதைந்திருந்த ஆலயத்தை வெளிக் கொணர்ந்தனர். மணலுக்குள்ளிருந்து கிடைத்ததால் அவ்வன்னையை அதிசய மணல் மாதா என அழைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாலயம் 2011-ல் அரசு சுற்றுலாத்தலமாக மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்து பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர். வாருங்கள் மணல் மாதா ஆலயம் செல்வோம். அன்னையின் ஆசீர் பெருவோம். சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மைத்திருத்தலம்.

    Previous Next

    نموذج الاتصال