No results found

    கந்தர் சஷ்டிக் கவசப் பாராயணம்


    சிவபெருமானே உருவாய் அமைந்த அருள்நிறை திருமுருகப் பெருமானின் தவ வடிவத்தைக் கண்டு மகிழ்ந்த அருட்செல்வர்

    திருப்பெருந்திரு தேவராய சுவாமிகள், கந்தப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கந்தர்

    கவசங்களை அருமையாகப் பாடி அருளியுள்ளார். அவற்றில் மிகவும் அருமையானது திருச்செந்தூர் மேவிய திருக்குமரன் கவசம்.

    கவசம் என்றால் .. காப்பு, இரும்பால் செய்யப்பட்ட சட்டை, காவல் செய்யும் மந்திரம், உடம்புக்கூடு, காப்பை உண்டாக்கும் மந்திரம்

    என்று சொல்லுவார்கள். அந்த முறையில் திருப்பெருந்திரு தேவராய சுவாமிகள் அருள்மிகு திருச்செந்திலாண்டவனான கந்தப் பெருமான் மீது பாடியுள்ள இந்தக் கவசம் இரும்புச் சட்டையைப்போன்று நம்மைக் காக்கும் காவல் மந்திரமாகும். அதனால்தான் அவர்

    அருள்தரும் திருமுருகனை அழைத்து, மனித உடம்பின் உறுப்புகளை எல்லாம், "காக்க காக்க" என்று 39 முறைகள் சொல்லிப்

    பாடியுள்ளார்.

    கந்தர் சஷ்டிக் கவசத்தை ஆறுமுகப் பெருமான் திருமுன் அமர்ந்து நாள்தோறும் படிப்பது நல்லது. அதற்கு அவகாசம் இல்லாதோர்

    செவ்வாய்க்கிழமை தோறும் படிப்பது நல்லது. அதற்கும் இயலாதவர்கள் கந்தர் சஷ்டி ஆறு நாட்களிலுமாவது படிப்பது நல்லது.

    இதனைப் படிப்பதால் வம்சவிருத்தி, காரிய வெற்றி, நோய் நீக்கம், கிரக தோஷ நிவர்த்தி, அறிவு செல்வ வளர்ச்சி, திருமணம்

    கைகூடுதல், பிள்ளைச் செல்வம் போன்ற நன்மைகள் ஏற்படும். அத்தோடு பேய் பிசாசு பயம் நீங்கும். பில்லி சூனியங்கள் அண்டாது.

    "கந்தர் சஷ்டிக் கவசத்தை எப்படிப் பாடினால் பயன் கிடைக்கும் ?" என்ற கேள்விக்கு தேவராய சுவாமிகளே அவரது கவசப்பாடலின்

    பிற்பகுதியில் சொல்லியுள்ளார். அதாவது தூய்மையான மனத்தோடும் உடலோடும், சந்தேகம் சிறிதுமில்லாத உண்மையான

    நம்பிக்கையோடும், கந்தன் கருணையால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விடாமல் பாடிவருவோர்க்கு

    கந்தனின் கருணை .. அருள் .. எளிதில் கிடைக்கும் என்று தேவராயரே தெளிவாக அவரது கவசப்பாடலின் 205ம் அடிமுதல் 210ம்

    அடி வரையுள்ள 6 வரிகளில் குறிப்பிடுகிறார். அதில் வரும்" ஒருநாள் முப்பத்து ஆறு உருக்கொண்டு, ஓதியே செபித்து" என்னும்

    ஒன்றறை வரியே ஒருசில இறையன்பர்கள் குறைகாணும் சந்தேகத்துக்கு உரியதாகும். "அப்படியானால் ஒரு நாளைக்கு 36 முறை

    இந்தக் கந்தர் சஷ்டிக் கவசத்தைப் பாட வேண்டுமா? அப்படி பாடினால்தான் பலன் (அவனது அருள்) கிடைக்குமா?" என்பதே

    அவர்களது சந்தேகம்.

    இதுவரையில் கந்தர் சஷ்டிக் கவசத்தைப் பாடி பயன் பெற்றவர்கள் யாரும் அதை 36 முறைகள் ஓதியதாக (பாடியதாக)ச்

    சொல்லவில்லை அல்லது தெரியவில்லை. அப்படி அன்றாடம் 36 முறைகள்* ஓதுவது இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில்

    எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது. ஆகையால் எல்லாரும் 36 முறைகள் கந்தர் சஷ்டிக் கவசத்தை ஒவ்வொரு

    நாளும் ஓத வேண்டும் என்பது கட்டாயமில்லை. இறையன்பர்கள் அப்படி 36 முறைகள் ஓத முடிந்தால் ஓதலாம். இல்லையேல் காலை,

    மாலை இரு வேளைகளும் மனத்தூய்மையோடு கண் மாறாமல் மனம் சிதறாமால் மாமுருகனிடம் மனம் தோய்ந்து உருகியவாறு ஓதித்

    திருநீறு அணிந்தால் போதும். எத்தனை முறை எந்தக் கவசத்தை ஓதினோம் என்பதைவிட எப்படி உண்மையான பக்தியோடு

    ஓதினோம் என்பதே மிகவும் முக்கியம். இறைவன் கந்தன் நீங்கள் ஓதும் கவசப் பாடலை மட்டுமல்ல, உங்கள் பண்பையும், அவரிடம்

    நீங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த உண்மையான பக்தியையும், உங்கள் மனதின் தூய்மையையும் கூடப் பார்த்துத்தான் அவன்

    உங்களுக்கு அருள்புரிய வருவான் என்பதை நீங்கள் மனமார உணர வேண்டும்.

    "அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான். அதுபோல அவனிடம் போய் உண்மையான

    அன்பு .. ஆழ்ந்த பக்திப்பெருக்கினால் .. உங்களைக் காத்து அருள்புரிய வேண்டி அழுதாலே போதும், அவன் உங்களைக் காக்க

    ஓடிவருவான். உங்களிடம் தன்னலமில்லாத ஆழ்ந்த முருக தெய்வ பக்தி இருந்தால் நீங்கள் ஒருமுறை ஓதினாலும் ஓடி வருவான்,

    கருணையின் கடலாகிய கருணா மூர்த்தி கந்தப் பெருமான்.

    வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப் பெருமான் திருமுன்பு அமர்ந்து இந்தக் கவசத்தைப் படிக்க வேண்டும். பிரமன், திருமால்,

    சிவன், சரசுவதி, இலக்குமி, பார்வதி ஆகிய ஆறு சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக .. சக்திவேல் சண்முகனாக .. விளங்குவதால்,

    ஆறுமுகத்துடன் கூடிய திருமுருகன் முன்பு உட்கார்ந்து ஒருமனதோடு இதைப் படிப்பது நல்லது. அதுவே சிறந்த பலனைக்

    கொடுக்கக்கூடியது. செவ்வாய், வெள்ளி, சஷ்டி, பரணி (இரவு), கார்த்திகை (காலை), விசாகம் ஆகிய நாட்களில் இந்தக் கவசத்தைச்

    சிறப்பாகப் படிக்கவேண்டும். கவச பாராயணத்துக்கு முன்னும் பின்னும், .. சரவணபவ .. என்னும் முருகப் பெருமானின் மூல

    மந்திரத்தை .. ஓம் .. சேர்த்து "ஓம் சரவணபவ" என 108 முறைகள் ஓதவேண்டும். அதுதான் பலன்தர வழிசெய்யும்.

    கவச பாராயணப் பாடலைக் குறையாகப் பாடக்கூடாது. அதை முழுமையாகப் பாடி முடிக்க வேண்டும். பாராயணத்தின் இடையில்

    யாருடனும் பேசுதல் கூடாது. முன்பின் மாறிப் படித்தலாகாது. கவச பாராயணம் பாடி முடித்த பிறகு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி,

    திருப்புகழ், பிள்ளைத் தமிழ், கந்தபுராணம் ஆகிய கந்தர் பஞ்ச புராணங்களிலிருந்து ஒவ்வொரு பாடல் வீதம் முறையே பாட வேண்டும்.

    பாராயணம் முடிந்ததும் ஆறுமுகன் திருவுருவத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி ஓம் வடிவமாகக் காட்டி வணங்க வேண்டும். விரதமிருந்து

    புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் சஷ்டியில் படிப்பதற்கு இந்தக் கவசமே மிகவும் சிறந்தது. இந்தக் கவசம் மேலே சொல்லப்பெற்ற

    பலவித நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டு வரும் கற்பகம் ஆகும்.

    நல்லெண்ணெய் விளக்கையே பூசை அறையில் வைத்துக் கொள்ளவேண்டும். கவசங்களைப் பிழையில்லாமல் நன்கு படிக்கப்

    பழகிக்கொள்ளவேண்டும். மனத்திற்குள் படிப்பவர்கள் பாதிப் பலனைத்தான் பெறுவார்கள். நன்றாக வாய்விட்டு (இராகம் போடாமல்)

    படிக்க வேண்டும். பாடலை மனனம் பண்ணி நூலைப் பாராமலே படிப்பது சிறப்பு. நூலுக்கு பூ வைத்து வணங்கி வழிபட்டுப் பின்பு

    படிப்பது மிகவும் சிறப்பாகும்.

    மந்திர சக்தி மிக்க கந்தர் சஷ்டிக் கவசத்தை மேலே சொன்ன முறைப்படி நாள்தோறும் பாராயணம் செய்யும் முருக பக்தர்களுக்கு

    அவனது திருவருள் கிடைக்கும். பயன் நிச்சயம் உண்டு. நம்பினார் கெடுவதில்லை அது நான்கு மறை தீர்ப்பு. கந்தன்

    கைவிடமாட்டான். கட்டாயம் காத்தருள் புரிவான்.

    கந்தன் கழலே சரணம் சரணம்.

    (* இதற்கான வேறு பொருள்:

    மு = மூன்று; பத்து (பற்று) = அவையாவன - ஆணவம், கன்மம் (கர்மம்), மாயை; அரு = நீக்கு.

    கருத்து - நாம் கந்த சஷ்டிக்கவசத்தை படிக்கும்போது, ஆசைகளையும் மும்மலங்களையும் நீக்கிவிட்டு தெளிந்த மனதுடன் இருக்கவேண்டும் என்பதே!)

    Previous Next

    نموذج الاتصال