No results found

    சித்த மருத்துவத்தில் பித்தப்பையில் கற்களுக்கான சிகிச்சை முறைகள்


    பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு. பித்தப்பையில் தான் கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் சேகரிக்கப்பட்டு உணவு செரிமானத்தின் போது சிறு குடலை வந்தடையும். சுமார் 30-50 மி.லி. பித்த நீர் பித்தப் பையில் இருக்கும். கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது. கல்லீரல் சுரக்கும் பித்த நீரில் கொழுப்பு அதிக அடர்த்தியாக இருப்பது, பித்த நீரில் பிலிரூபின் அதிகமாக இருப்பது, பித்தப் பை சரியாக சுருங்கி, விரியாமல் இருப்பது, இவை பித்தப் பையில் கற்கள் உருவாகுவதற்கான பொதுக் காரணங்கள்.

    இவை தவிர பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது, அதிக எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

    சித்த மருத்துவத்தில் பித்தப்பை மற்றும் பித்தத்தாரை கற்களுக்கான சிகிச்சை முறைகள் வருமாறு:

    இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, பழச்சாறு, புதினா சாறு இவைகளை சமஅளவில் எடுத்து, அதனுடன் சமஅளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 10 மி.லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து பழச்சாற்றில் கலந்து குடிக்க வேண்டும். கீழாநெல்லி பொடி அல்லது கீழாநெல்லி சாறு மற்றும் கரிசாலை பொடி அல்லது கரிசாலைச் சாறு எடுத்து மோருடன் கலந்து காலை, இரவு என இருவேளை குடித்து வரவேண்டும்.

    கீழாநெல்லி மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். சாந்த சந்திரோதய மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    பிடங்கு நாறி இலைப்பொடி, மஞ்சள், கடுக்காய்த் தோல் இவை மூன்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் குடிக்க வேண்டும். இது பிடங்கு நாறிக் குடிநீர் எனப்படும். மண்டூராதிக் குடிநீர், வெடியுப்புச் சுண்ணம், வெடிஅன்னபேதிச் செந்தூரம் இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    நார்ச்சத்து அதிகமுள்ள அவரை, பீன்ஸ், கோவைக்காய், சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகள் இவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    Previous Next

    نموذج الاتصال