No results found

    முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி


    தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு; முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று.

    அமைவிடம் :

    அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம்.

    திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

    ஆலய வரலாறு :

    தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

    ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

    இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. "சரவணப் பொய்கை'' என்ற புகழ்மிக்க `குமார தீர்த்தம்' என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.

    இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது `மடம் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை' எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    வள்ளி திருமணம் :

    முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார். இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

    வழிபடும் முறைகள் :

    திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும்.

    மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும்.

    மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும்.

    தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال