இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. அருள்மிகு சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமானாக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வல்ல கொண்டம நாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இத்திருக்கோவிலில் ஏராளமான நகைகள் இருந்ததாகவும், அதனை கள்வர்கள் கவர்ந்து செல்ல, திப்பு சுல்தான் அதனை மீட்டுத் தந்ததாகவும், செவி வழி செய்தி உலவுகிறது.
சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த திருக்கோவில் 15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர்களை உடையதாகும். இங்கு சவுந்தரராஜ பெருமாளுக்கும் சவுந்தரவள்ளி தாயாருக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. மேலும், கருடாழ்வார், விஷ்ணு துர்க்கை, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆண்டாளுக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இதுபோக, வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலின் முன்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி, தீபம் போடும் கம்பம் ஆகியவை அமைந்துள்ளன.
இது தென்கலை கோவிலாகும். இங்கு பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. இத்திருக்கோவிலுக்கு சொந்தமாக பால் கேணி ஒன்று அமைந்துள்ளது. து 10 அடி உயரம் கொண்ட 4 பக்க சுவரும், 10 அடி ஆழமும் கொண்டதாகும். இந்த பால் கேணியில் வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் வற்றாது என்பது சிறப்பு.
ஆடி மாதம் இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் அனுமார், சிம்மம், கருடன், சேஷ வாகனம், யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 7-ம் நாளன்று திருக்கல்யாணமும், ஆடிப் பவுர்ணமி நாளில் திருத்தேரோட்ட உற்சவமும் நடைபெறும்.
குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்துப் பல்லக்கில் பெருமாள் உற்சவம் வரும் நாட்களில் சுற்று வட்டார பகுதி கிராமத்தினர் திரளாக வந்து பெருமாளை வழிபட்டு அருள் பெற்று செல்வர். சவுந்தரராஜ பெருமாளை தரிசித்தால் தொழில் வளரும், குடும்பம் செழித்தோங்கும், திருமண யோகம் கூடி வரும், நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.