ரத்தத்தில் உள்ள ஹிஸ்டமின் அளவு அதிகரிப்பதால், கொசு மற்றும் பூச்சிக் கடியினால், சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர் வீச்சுகளினால், தோலில் ஈரப்பதம் குறைவதால், வைட்டமின் ஏ,ஈ குறைபாட்டினால், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்றவைகளால் தோல்அரிப்பு, வறட்சி ஏற்படும்.
தோல் அரிப்புக்கு பரங்கிப்பட்டை சூரணம் 2 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி இவற்றை மூன்று வேளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
அருகன் தைலம், குப்பைமேனி தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசலாம். பனி நேரங்களிலும், வெப்பமான பகுதிகளிலும் வேலை பார்ப்பது போன்றவற்றால் தோலின் ஈரப்பதம் குறைந்து தோல் வறட்சி அடைகிறது.
தோல் வறட்சிக்கு- கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் அரைத்து தோல் வறண்ட பகுதியில் பூச வறட்சி நீங்கும்.
மேலும் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி பழச்சாறு, ஆரஞ்சு, சாத்துக்குடி, வெண்பூசணி சாறு, முலாம்பழ சாறு, கேரட், இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)