ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? எந்தச் சமயங்களில் உறவுகொண்டால் கருத்தரிக்கும்? இந்த மாதிரி கேள்விகள் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும்.
ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபாலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபாலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14-ம் நாளில் (மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14-வது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.
இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது. இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.
ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்துபோகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.
உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதற்காக இதைச் சொன்னேன்.
ஒருமுறை உடலுறவுகொண்டாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
எந்தெந்த நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம் என்பது அது மாதவிடாய் சுழற்சியின் தொடர்ச்சியைப் பொறுத்தது. ஒரு பெண் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்படுகிறார் என வைத்துக்கொள்வோம். மாதவிடாய் ஆன நாளை, முதல் நாள் எனக் கணக்கிட வேண்டும். 9-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள் ஆகும். இதைச் சரியாகக் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களுக்கு 28 நாட்கள் என்ற சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது இல்லை. 18-ம் நாள் கருத்தரிப்பு ஏற்பட்டால், அதை குறைந்தபட்ச சுழற்சி எனவும் 10-ம் நாள் கருத்தரித்தால், அதை அதிகபட்ச சுழற்சி எனவும் சொல்வோம்.