மாங்காட்டிலே அம்மை காமாட்சி பஞ்சாக்னியிலே தவம் செய்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் சொல் கேட்டு அவரை மணக்க காஞ்சி செல்லும் போது அந்த அக்னியை அணைக்காமலே சென்று விடுகிறார். இதன் காரணமாக இதணை சுற்றி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்கமாட்டாமல் தவித்தார்கள். நிலங்கள் வற்றிப்போயின,கால் நடைகள் துன்புற்றன.
அப்போது அந்தப்பக்கம் தேசாந்திரமாக வந்த ஆதி சங்கரர் லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளால் ஆன “அஷ்ட கந்தம்“ அர்த்த மேரு” என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்ர யந்திரம் ராஜ யந்திரம் ஆகும். ஆமை வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற் புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீசக்ர யந்திரமும் உண்டாக்கப்பட்டுள்ளது.
மூலிகைகளால் உருவானதால் ஸ்ரீசக்ரதிற்க்கு அபிஷேகம் கிடையாது, ஜவ்வாது, சந்தனம்,புனுகு சாத்தப்படுகின்றது. குங்கும அர்ச்சனை ந்டைபெறுகின்றது. மாங்காட்டிலே இந்த ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோகத்தாலான ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் குங்கும அர்ச்சனை இந்த ஸ்ரீசக்ரத்துக்குத்தான்.
பல்லவர் காலத்தில் மிகப் பெரிய சக்கரக் கோவில். கர்ப்பக்கிருகத்தில் 6"ஜ்6"ஜ்3" அளவிலான ஸ்ரீசக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. அதி அற்புதங்கள் தன்னகத்தே கொண்ட ஒரே ஸ்ரீசக்கரக் கோவில். அர்த்தமேரு ஸ்ரீசக்கர தரிசனம் விசேஷம்.
நாற்பத்து ஐந்து கோணங்களுடன் திகழும் இந்த ஸ்ரீசக்கரம் அஷ்டகந்தம் என்ற எட்டுவகை மூலிகைகளால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. இங்கு திருமணமாகாதவர்கள் காமாட்சி எலுமிச்சம்பழம் கனி 3, 4, 8 என்று நிர்ணயித்து கனியை அம்மனுக்கு சமர்ப்பித்து திருமண வாய்ப்பை அடைகிறார்கள. இது திருமண பேற்றை அளிக்கும் பிரார்த்தனை தலமாக பேசப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு கணவர்-மனைவி தம்பதி சமேதராய் வந்து பிரார்த்தனை நிறைவு செய்வர்.