No results found

    அருள்மிகு காரைக்கால் அம்மையார் வரலாறு


    கி.பி.5-ம் நூற்றாண்டில் காரைக்காலை சேர்ந்த தனதத்தர் என்ற செல்வந்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார்(காரைக்கால் அம்மையார்).

    சிவபக்தை

    இளவயது முதல் சிறந்த சிவபக்தையாக அவர் விளங்கினார். இந்த நிலையில் புனிதவதியாருக்கு, நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வந்தரான பரமதத்த செட்டியார் மணமுடித்து வைக்கப்பட்டார். ஒருநாள் பரமதத்த செட்டியாரை காண வந்த வணிகர் ஒருவர் இரண்டு மாங்கனிகளை அவரிடம் கொடுத்துச்சென்றார். பரமதத்தர் அந்த இரண்டு மாங்கனிகளையும் தமது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் புனிதவதியாரின் இல்லத்திற்கு சிவனடியார் ஒருவர் பசித்த நிலையில் வந்தபோது புனிதவதியார் அவரை தமது இல்லத்திற்குள் அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். அப்பொழுது கணவர் அனுப்பி இருந்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை அவருக்கு அளித்தார்.

    இறைவனின் கருணையால்

    அதன் பிறகு இல்லம் வந்த கணவருக்கு புனிதவதியார் மாங்கனியுடன் உணவு பரிமாறினார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால் மற்றொரு மாங்கனியை கேட்க, புனிதவதியார் என்ன செய்வது? என்று தெரியாமல் இறைவனை வேண்டினார். அப்போது அவரது கையில் இறைவனின் கருணையால் மாங்கனி ஒன்று வந்தடைந்தது.

    அந்த மாங்கனியை புனிதவதியார் தமது கணவருக்கு அளித்தார். அந்த மாங்கனி முன்பை விட இனிமையாக இருந்ததால் இதுதான் அனுப்பியது அல்ல என்றும், இந்த மாங்கனி ஏது? என்றும் பரதமதத்தர் கேட்க, புனிதவதியாரும் நடந்த உண்மைகளை கணவரிடம் கூறினார். அப்படி என்றால் இன்னொரு மாங்கனியை பெற்றுத்தா என்று பரமதத்தர் கேட்கவும், புனிதவதியார் கைகளை ஏந்தி இறைவனை வேண்டினார். அப்போது அவரது கையில் மேலும் ஒரு மாங்கனி வர அதனை அவர் கணவரிடம் அளித்தார்.

    அந்த மாங்கனியை பரமதத்த செட்டியார் வாங்கும்போது அது திடீரென்று மறைந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பரமதத்தர் தமது மனைவி மனிதப்பிறவி அல்ல, தெய்வப்பிறவி என்பதை அறிந்து அவரை விட்டு விலகிச்சென்று பாண்டிய நாட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    அம்மையே என்று அழைத்த இறைவன்

    கணவர் பாண்டிய நாட்டில் இருப்பதை அறிந்த புனிதவதியார் அவரை தேடிச்சென்றபோது பரமதத்த செட்டியார் தமது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் வந்து புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினார். அதனைத் தொடர்ந்து தமக்கு இனி இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவரது வேண்டுதலுக்கு இரங்கினார். பேய் உருவம் தாங்கிய நிலையில் தலையால் நடந்து கயிலாயத்தை சென்றடைந்தார். அங்கு அவரை சிவபெருமான் அன்புடன் ‘அம்மையே’ என்று அழைக்க, அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்று அழைத்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.

    அப்போது ‘நம்மிடம் நீ வேண்டுவது யாது’ என்று சிவபெருமான் கேட்க, அதற்கு அம்மையார் ‘இறவாத அன்பு வேண்டும், பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். உன் ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த வண்ணம் பாடிக் கொண்டே உன் பாதத்தின் கீழிருக்க வேண்டும்’ என்று வேண்டினார்.

    அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், ‘அம்மையே! நீ திருவாலங்காடு அடைந்து எமைப்பாடு என்று கூறினார். அதனை தொடர்ந்து திருவாலங்காடு சென்றடைந்த அம்மையார், ‘கொங்கை திரங்கி’ மற்றும் ‘எட்டி இலம் ஈகை’ என்று தொடங்கும் திருப்பதிகங்களை பாடி அருளினார். திருவாலங்காட்டில் இறைவனின் பொற்பாத நிழலில் என்றும் வீற்றிருக்கும் பெரும்பேறு பெற்றார் என்பது புராண வரலாறு.

    மாங்கனித் திருவிழா

    அம்மையாரின் வரலாற்றினை நினைவுக்கூறும் வகையில் புராண ஐதீகப்படி ஆண்டுதோறும் “மாங்கனி திருவிழா” நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இவ்விழா நேற்று முதல் தொடங்கியது. இன்று காலை ‘திருக்கல்யாணம்’ நிகழ்ச்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சுவாமி வீதியுலாவும் (மாங்கனி இறைத்தல்) நடைபெறுகிறது.

    Previous Next

    نموذج الاتصال