No results found

    வீடு - மனை வாங்குபவர்களுக்கு சட்ட வல்லுனர் ஆலோசனைகள்


    நகர்ப்புறங்களில் வீடு, மனை உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற சொத்துக்கள் வாங்கும்போது பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ரீதியான பல்வேறு நடைமுறைகள் பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் விரிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

    1. குறிப்பிட்ட தனி நபர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டாலும், சொத்து வாங்கும்போது அதற்கான மூலப்பத்திரங்கள் அவசியமானது. ஆனால், அதற்கு பதிலாக பத்திரப் பதிவு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட நகல் பத்திரம் அளிக்கப்படுவதன் பின்னணியில். குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டை வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கி, அதற்கு ஈடாக மூலப்பத்திரம் தரப்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது, கடன் பெற்று சில வருடங்கள் கழித்து மூலப்பத்திரம் தொலைந்துவிட்டது என்பதன் அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து வாங்கப்பட்ட நகல் பத்திரத்தைக் காட்டியும் சொத்து விற்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

    2. ‘டபுள் டாக்குமெண்டு’ உள்ளிட்ட போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்ற முயற்சிப்பவர்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஆவணங்களில் இருக்கும் ஒரு சில குளறுபடிகள் காரணமாகவும் வில்லங்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது, மூலப்பத்திரத்தில் சர்வே எண் ஆங்கிலத்திலும், பத்திரத்தில் தமிழிலும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதாவது, சர்வே எண் 4-எ என்று தமிழிலும், 4-கி என்று ஆங்கிலத்திலும் இருப்பது சிக்கல்களை உண்டாக்கும்.

    3. குறிப்பிட்ட இடம் அல்லது மனையை சுற்றிலும் நான்கு எல்லைகளில் உள்ள சர்வே எண்கள் வேறொன்றாகவும், மனையின் சர்வே எண் வேறொன்றாகவும் குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன.

    4. அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது மேலும், மறு விற்பனை என்ற முறையில் ரீசேல் செய்யப்பட்டு கைமாறும் இடமாக இருப்பதால், தாராளமாக வாங்கலாம் என்று நம்பிக்கைக்குரிய விதத்தில் சொத்து பற்றிய சட்ட அடிப்படை அறியாமல் பலரும் ஆலோசனை கூறியதன் அடிப்படையில் மனை அல்லது வீடு வாங்கி சிக்கலுக்கு உள்ளானதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

    5. புதிய மனைப்பிரிவு அல்லது மறு விற்பனையில் வரும் இடம் அல்லது மனையை வாங்க முடிவு செய்யும் பட்சத்தில் முதலில் சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் தன்மை, இதற்கு முன்பு அவர்கள் மேற்கொண்ட வீட்டுமனை திட்டங்கள், பயன் பெற்றவர்கள், மற்ற நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் உள்ள விலையின் வித்தியாசம் போன்ற விஷயங்களை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். மேலும், ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றி வழக்கறிஞர் வழிகாட்டல், சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பது போன்றவற்றை கச்சிதமாக செய்யவேண்டும்.

    6. நிலத்தை மனையாக பிரித்து விற்பது உரிமையாளரா அல்லது நில உரிமையாளரிடமிருந்து அதிகாரம் பெற்றவரா என்பதை கவனிப்பதோடு, பவர் பத்திர உரிமை மூலம் மனை விற்பனை என்றால் அது பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட இடம் அல்லது மனைக்கு, முன்னதாக வேறு நபர்களுக்கு அதிகாரம் அளிகப்பட்டிருந்தால் அவை முறையாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், பவர் தந்தவர் மற்றும் பவர் வாங்கியவர் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லையென்றால் பவருக்கான அதிகாரம் செல்லாது. பவர் வாங்கியவர் சார்பாக வேறொருவர் விற்பனை செய்ய முயலும்போது அதற்குரிய ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    7. பவர் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் 2009-ல் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு கொடுக்கப்பட்ட அதிகாரப் பத்திர விவரங்களை வில்லங்கச் சான்றிதழ் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியாது. மேலும், பதிவு செய்யப்படாத அடமானப் பத்திரமாக சொத்து கைமாற்றப்பட்டிருந்தாலும் வில்லங்கச் சான்றிதழில் அது வராது.

    8. வீடு அல்லது மனை சம்பந்தப்பட்ட சொத்து பரிமாற்றங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் அதிகபட்சம் முப்பது வருடங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு விற்க முயற்சிக்கப்படும் நிலையில், மூலப்பத்திரம் பதிந்த ஆண்டிலிருந்து சம்பந்தப்பட்ட சொத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். மேலும், மூலப்பத்திரம் பதிவு செய்யப்பட்ட அலுவலகம், நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இரண்டு இடங்களிலும் சம்பந்தப்பட்ட இடம் குறித்த வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து தெரிந்துகொள்வது முக்கியம்.

    9. பொதுவாக, கைகள் மூலம் எழுதப்பட்டு பதிந்த ஆவணங்களை கணினி வழியாக மாற்றம் செய்யும்போது அவற்றில் ஏதேனும் விவரங்கள் பிழையாக இருப்பது அல்லது விடுபட்டிருப்பது போன்ற விஷயங்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال