No results found

    அஞ்சறைப்பெட்டியின் இளவரசி 'ஏலக்காய்'


    அறுசுவையில் காரம் சார்ந்த உணவுகளில் மிளகு எப்படி இன்றியமையாது உள்ளதோ, அதைப்போல இனிப்பு சார்ந்த உணவுகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது 'ஏலக்காய்' தான். அதனால் தான் 'அஞ்சறைப்பெட்டியின் இளவரசி' என்ற மகுடத்தையும் தட்டிச்செல்கிறது இந்த ஏலக்காய்.

    உண்மையில் இனிப்பு சுவை சார்ந்த பாயாசம் மட்டுமின்றி, பிரியாணி, குருமா போன்ற பல வகையான கார உணவுகளும் ஏலக்காய் இல்லாமல் முழுமை பெறாது. சுண்டி இழுக்கும் தனக்கே உரிய மணத்தையும், மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான ஏலக்காய். உலகிலேயே மிக விலை உயர்ந்த கடைசரக்குகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பது நம்ம ஊர் ஏலக்காய். அந்த வரிசையில் முதலில் குங்குமப்பூவும், இரண்டாவதாக வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்தும் வெண்ணிலாவும், அடுத்து ஏலக்காயும் விலை உயர்ந்த பொருட்களாக உள்ளன.

    பதினாறாம் நூற்றாண்டில் மிக விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டவற்றுள் ஏலக்காயும் ஒன்று. உண்மையில் ஒரு கைப்பிடி அளவு ஏலக்காய் விலையானது, ஒரு ஏழையின் ஒரு ஆண்டு சம்பளம் அளவிற்கு சமம் என்ற அளவில் இருந்துள்ளது. இருப்பினும் ஐரோப்பியர்கள் அதை மகிழ்ச்சியுடன் செலுத்தி பெற்றுச் சென்றதை வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அதற்கு காரணம் என்னவெனில் சிறப்பு மிக்க ஏலக்காயின் மருத்துவ குணமும், உணவு சமையல்களில் அதன் பங்களிப்பும் தான்.

    ஏலக்காய் எனும் மூலிகை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இது மேற்புறம் பச்சை நிறத் தோலையும், உள்ளே சிறு சிறு விதைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஏலக்காயின் உள்ளேயும் 5 முதல் 8 விதைகள் வரை காணப்படும். மேற்புற தோலை விட உள்ளிருக்கும் விதைகளுக்கே மருத்துவ நன்மைகள் அதிகம் என்கிறது சித்த மருத்துவமும், நவீன அறிவியலும். ஏனெனில் ஏலக்காய் விதைகளில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட மணத்தைத் தரும் நறுமண எண்ணெய் பொருட்கள் உள்ளன. அதுவே அதன் பல்வேறு உடல் நன்மைக்கும் காரணமாகின்றது.

    பாரம்பரிய சீன மருத்துவத்தில் வயிற்றுவலி, சிறுநீர்ப்பை தொற்று, மலச்சிக்கல், கழிச்சல், ஆஸ்துமா ஆகிய நோய் நிலைகளில் ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாக அறியப்படுகின்றது. இது தலைவலி, வீக்கம் ஆகியவற்றுக்கு நிவாரணம் தரும் பொருளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய திபெத்திய மருத்துவத்தில் ஏலக்காயுடன், லவங்கப்பட்டை, திப்பிலி சேர்த்து உடல் பருமன், உடலில் கொழுப்பு அதிகரித்த நிலை, கல்லீரல், இருதயம், சிறுநீரகம் சார்ந்த நோய்நிலைகளில் பயன்படுத்தப்படுவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காயின் பங்கு உள்ளது கூடுதல் சிறப்பு.

    ஏலக்காயில் நறுமணத்திற்கும், மருத்துவ தன்மைக்கும் காரணம் அதில் உள்ள 'சினியோல்' என்ற முக்கிய வேதிப்பொருள் காரணமாகிறது. மேலும் 'பி-சைமீன்' என்கிற வேதிப்பொருளும் மருத்துவத் தன்மைக்கு காரணமாகிறது. இது தவிர இரும்பு சத்தும், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற கனிம உப்புக்களும் ஏலக்காயில் உள்ளதால் உணவில் ஏலக்காயை சேர்ப்பது பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

    சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்தத்தைக் குறைக்கும் பல்வேறு சித்த மருந்துகளில் ஏலக்காய் சேருகிறது. ஏலக்காய் கார்ப்பு சுவையை உடையதால் கபம் சார்ந்த நோய் நிலைகளிலும் பயன் தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்துமா போன்ற கப நோயில் மூச்சுப் பாதையில் உள்ள சளியை இளக்கி வெளிப்படுத்தும் தன்மை உடையதாக உள்ளது.

    வயிறு புண்ணுக்கும், வயிறு சார்ந்த உபாதைகளுக்கும், 'ஏலாதி சூரணம்' எனும் மருந்து சித்த மருத்துவத்தில் மிகப் பிரபலமானது. இந்த மருந்து ஏலக்காய், மிளகு, சிறுநாகப்பூ, கிராம்பு, சுக்கு, கூகைநீறு ஆகிய பல்வேறு கடைசரக்குகளை கொண்டது. இது ஏலக்காயை முதன்மையாகக் கொண்டது. மற்ற எல்லா கடைசரக்குகளை விட அதிக பங்கு ஏலக்காய் இதில் சேருகிறது. இதனால் பித்த வாயு, குன்மம் (வயிற்றுப் புண்) போன்ற நோய்கள் தீரும் என்கிறது சித்த மருத்துவம்.

    துரித உணவுகளால், எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்களால், நவீன வாழ்வியல் நெறிமுறைகளால், அசீரணமும், வாயு தொல்லையும், வயிற்று புண்ணும் இக்காலத்தில் அதிகமாகிவிட்டது. முறையற்ற உணவு முறைகளால் உண்டாகும் மேற்கூறிய வயிறு சார்ந்த உபாதைகளுக்கு ஏலக்காய் நற்பலன் தரும். ஏலக்காயுடன், சீரகம், தனியா இவற்றை சம பங்கு சேர்த்து பாலில் காய்ச்சி எடுத்துக்கொண்டால் தணியாத பித்தம் தணியும். அதிகமான பித்தத்தால் உண்டான வயிற்றுப்புண் ஆறும். மேலும் பித்தம் அதிகரிப்பால் உண்டான வாந்தி, வாய்க்குமட்டல் இவற்றுக்கும் நற்பலன் தரும்.

    வாய் துர்நாற்றத்திற்கு ஏலக்காய் மிகச்சிறந்த மருந்து எனலாம். வாயில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிருமிகளால் சரியான, சீரான பராமரிப்பு இன்மையால், வாய் துர்நாற்றம் பலருக்கு ஏற்படக்கூடும். குடல் வாழ் கிருமிகள் பாதிக்கப்பட்டாலும், குடல் புண் இருந்தாலும் கூட வாய் துர்நாற்றம் உண்டாகும். ஏலக்காயின் விதையில் உள்ள நறுமண எண்ணெய் வேதிப்பொருட்கள் பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இதனால் கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் நீங்கும். ஆகவே வாய் துர்நாற்றத்திற்கு ஏலக்காயுடன், புதினா சேர்த்து அவ்வப்போது வாயிலிட்டு மென்று வர நல்ல பலன் தரும்.

    வெயில் காலங்களில் பித்தத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தர ஏலக்காய் பொடியை மாதுளை மணப்பாகு எனும் சித்த மருந்துடன் எடுத்துக்கொண்டால் நற்பலன் தரும். மாதுளையும் பித்தத்தைக் குறைத்து உடல் உளைச்சலைப் போக்கும். மேலும் ஏலக்காய் விதைகளை ஆண்மை பெருக்கியாக பிற நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

    அஞ்சறைப்பெட்டியின் மற்றொரு கடைசரக்கான மஞ்சள் உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதன் மருத்துவ நன்மைகளை அதிகரிக்க மிளகையும் அதனுடன் சேர்ப்பது நல்லது என்கிறது நவீன அறிவியல். அதே போல் ஏலக்காயை மஞ்சளுடன் சேர்த்தாலும் அதன் மருத்துவ தன்மை கூடுமாம். ஆக, மஞ்சள் பொடியுடன், சிறிது மிளகு, சிறு துண்டு லவங்கப்பட்டையுடன், ஏலக்காய்-2 சேர்த்து பாலில் காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

    ஏலக்காயை உணவில் சேர்ப்பது விரைவில் செரிமானத்தை தூண்டும். அசீரணத்தைப் போக்கும். மணத்திற்க்காக என்றில்லாமல், உணவு சார்ந்து உண்டாகும் நோய் நிலைகளை தடுப்பதற்காக பல நூறு ஆண்டுகளாக ஏலக்காய் நம் முன்னோர்களால் உணவில் சேர்க்கப்பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏலக்காயினால் இருமல், நெஞ்சில் கோழைக்கட்டு, கழிச்சல், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கும் என்கிறது சித்த மருத்துவ நூலான தேரையர் குணவாகடம்.

    ஏலக்காயை பாட்டி வைத்தியமாக வீட்டு மருத்துவத்தில் பல்வேறு நோய்நிலைகளுக்கு பயன்படுத்த நல்ல பலன் தருவதாக உள்ளது. ஏலக்காயை சீரகம், ஓமத்துடன் சேர்த்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள அசீரணம், வயிற்றுவலியில் நிவாரணம் தரும். அதே போல, ஏலரிசி எனும் ஏலக்காய் விதையுடன் சுக்கு, கிராம்பு, சீரகம் சேர்த்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வயிற்றுப்புண் நிலையில் நற்பலன் தரும். வயிற்றுப்புண்ணால் பல நாட்களாக அவதிப்படுபவர்களுக்கு குறிகுணம் குறைந்து நிம்மதியான உறக்கம் தரும்.

    ஏலக்காயுடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமாக்கி குடிக்க பித்த மயக்கம் நீங்கி நன்மை பயக்கும். ஏலக்காய் பொடியுடன் தினசரி தேன் சேர்த்து எடுத்துக்கொள்ள கண் பார்வையை அதிகரிக்க உதவும் என்கிறது நவீன அறிவியல் காரணமாக அமைவது அதில் உள்ள பீட்டா கரோடின் எனும் வேதிப்பொருட்கள் தான்.

    ஏலக்காயின் பச்சை நிறத் தோலுக்கு காரணமாகும் இயற்கை நிறமிகள் நம் உடலில் செல்கள் சிதைவதை தடுப்பதாக உள்ளது. குடல் சார்ந்த புற்றுநோய்களை வரவிடாமல் தடுப்பதும் இதன் சிறப்பு. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏலக்காய் கொடுத்து நடத்திய சோதனையில், சர்க்கரை நோயால் உண்டாகும் பல்வேறு அழற்சி நொதிகளை தடுப்பதாக உள்ளது. மற்றொரு ஆய்வில் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள டிரைகிளிசரைட் அளவை குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சிதை மாற்றங்களை நம் உடலில் துரிதப்படுத்துவதாகவும் உள்ளதை நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

    சூடான தேநீரில் ஏலக்காய் சேர்த்து குடிக்கும் பழக்கமும் காலம் காலமாக பலருக்கு உண்டு. இது தேநீரின் மணத்திற்காக மட்டுமின்றி பல மருத்துவ நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. தேநீரில் வெறும் ஏலக்காய் மட்டுமல்லாமல், இஞ்சி, மிளகு, சோம்பு, லவங்கப்பட்டையையும் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வது நறுமணத்திற்கு மட்டுமின்றி, மனதிற்க்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

    தமிழுக்கு ஆதாரமாகும் சங்க இலக்கியங்களில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்றியமையாதவை. இந்நூல்களில் பலவற்றிற்கு மருந்துகளின் பெயரினைச் சூட்டி இலக்கியத்தோடு மருத்துவத்தையும் ஒரு சேர நம் மூதாதையர்கள் வழங்கியுள்ளது சிறப்பு மிக்கது. அத்தகைய நூல்களில் 'ஏலாதி'யும் ஒன்று. அத்தகைய இலக்கியத்தோடு ஏலாதி எனும் அஞ்சறைப்பெட்டி மருந்தினையும் நாம் பயன்படுத்த துவங்கினால் நம் வாழ்வியலோடு ஆரோக்கியம் கைகூடும்.

    Previous Next

    نموذج الاتصال