No results found

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்- பெண்களின் அழகிற்கு இயற்கை வழிமுறைகள்


    அழகு என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவது பெண்களை வர்ணிக்கத் தான். அந்த அளவு பெண்களுக்கும், அழகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனெனில் அழகுக்கு மெனக்கெடாத பெண்களே இல்லை. 'அகத்தின் அழகு தான் முகத்தில் தெரியும்' என்ற பழமொழியை பலரும் வாதிட்டாலும், முகத்தின் அழகிற்கு தனி கவனம் செலுத்துபவர்கள் பெண்கள்.

    பெண்களைக் கவர்வதற்காக எண்ணற்ற வேதிக்கலவைகளைக் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் இன்றைய சந்தைகளில் அதிகம் உலாவருகின்றன. அதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவெனில், பெண்களின் அழகுக்காக விற்பனைக்கு வரும் பொருட்களில் கிட்டத்தட்ட 160-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு இயற்கையை மறந்து செயற்கை வேதிப்பொருட்களை நாடுவதால் ஏற்படும் விளைவுகள் அவர்களின் அழகினை மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் சிதைக்கும்.

    அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த பல்வேறு வேதிப்பொருட்கள் நச்சு தன்மை வாய்ந்தது என்று ஒப்பனை பொருட்கள் சார்ந்த தரவுத்தளங்களில் கூறப்படுவது அதிர்ச்சி தரும் ஒன்று. உதாரணமாக பாரபீன்கள் வகை வேதிப்பொருட்கள், டிரைகிளோசன், டைஎதிலமைன் ஆகிய ஒப்பனை பொருட்களில் சேரும் வேதிக்கலவைகள் பல்வேறு ஒவ்வாமையை விளைவிக்க கூடியது.

    சில அழகுசாதனப் பொருட்களில் சேரும் சோடியம் லாரல் வகை வேதிப்பொருட்கள் தோலை சிதைக்கும் தன்மையை உடையது என்கின்றன ஆய்வுகள். பலரும் பயன்படுத்தும் நறுமணம் தரும் செயற்கை வாசனை திரவியங்கள், செயற்கை முடி சாயங்கள் ஒவ்வாமையை விளைவிக்கக்கூடியதாக உள்ளன.

    ஆரோக்கியத்திற்கு மெனக்கெட்டு மிளகு, மஞ்சள், சீரகம் என்று அஞ்சறைப்பெட்டி சரக்குகளை பயன்படுத்தி நலம் தரும் உணவு வகைகளை சமைத்திடும் பெண்கள் அழகிற்கு மெனக்கெட்டு இயற்கையை நாட வேண்டியது இன்றைய நவீன உலகில் அவசியம்.

    நலுங்கு மா பொடியும், பாசிப்பயறு மாவும் இயற்கையாய் பயன்படுத்திய காலத்திலே அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள். உலக அளவில் அழகிற்காக ஒப்புமை கூறப்படும் கிளியோபாட்ரா போன்ற இளவரசிகளும் அழகிற்காக சோற்றுக்கற்றாழை மூலிகையை பயன்படுத்தியதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

    ஆகவே, பெண்கள் சருமத்தை பாதுகாக்க இயற்கை மூலிகைக் கலவைகளை கொண்ட நலங்கு மாவினை பயன்படுத்தலாம். அதில் சேரும் சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சு வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரை பூ ஆகிய நறுமணமூட்டும் மூலிகைகள் வெறும் நறுமணம் மட்டும் வீசாமல், சருமத்திற்கு ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்.

    சந்தனம், வெட்டிவேர் ஆகியன தோலில் பித்தத்தை குறைத்து தோல் முதுமை அடைவதை தடுக்கும். மேலும் இவை சரும தொற்றுக்கள், முகப்பருக்கள், தோலில் கருமை நிறமாற்றம் வராமலும் தடுக்கும். அதில் சேரும் ஆவாரைப்பூ உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை நீக்கி இனிய மணம் வீசச் செய்யும். இந்த இனிய மணத்தால் பெண்களின் மனமும் மகிழ்ச்சி அடையும். சந்தனத்திற்குப் பதிலாக செஞ்சந்தனத்தை பயன்படுத்தினாலும் முகப்பருக்கள் நீங்கும். சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தினாலும் முகப்பருக்கள் குறையும்.

    இன்று முகத்திற்கு இயற்கை மூலிகைகளான மஞ்சளும், கஸ்தூரி மஞ்சளும், முல்தானி மட்டியும், சந்தனமும், ரோஜாப்பூ பன்னீரும் பயன்படுத்தி வந்த காலம் மலையேறிவிட்டது. அதற்கு மாற்றாக வேதிப்பொருட்கள் சேர்ந்த பூச்சுகளை நாடுவது வாடிக்கையாகிவிட்டது. தோலின் மீது பயன்படும் பூச்சுகளில் உள்ள வேதிப்பொருட்களில் 60 சதவீதம் உட்கிரகிக்கப்படுகின்றன.இவற்றால் அழகு உண்டாவது போல் தோற்றத்தை உண்டாக்கி விரைவில் பல ஒவ்வாமை விளைவுகளை ,உடல் உபாதைகளை பின்னாளில் ஏற்படுத்தும்.

    தலைமுடி உதிரலுக்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருப்பதால், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. அது ஒருபுறமிருக்க, முடியை பாதுகாக்க பாட்டி வைத்தியமாய் பலரும் தேங்காய் எண்ணையில் வெட்டிவேர், வெந்தயம், கருவேப்பிலை, வேப்பிலை, கருஞ்சீரகம், ஆகியவற்றை எல்லாம் சேர்த்து பயன்படுத்தி வருவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது.

    முடிஉதிரலை தடுக்க, போஷாக்கான உணவுகளோடு தலைமுடி எண்ணையும் பயன்படுத்துவது நல்லது. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நீலி பிருங்காதி தைலம் எனும் தைலம் மிகப்பிரசத்தி பெற்றது. மேலும் .நரைமுடிக்கு எளிமையான முறை என்னவெனில் கறுப்பு மருதாணி இலையை அல்லது கரிசாலை கீரையின் இலையை தேங்காய் எண்ணையில் காய்ச்சி பயன்படுத்தி வந்தால் நரைமுடி கருப்பாகும்.

    இன்று உலகமே அதிகம் நாடும் 'இண்டிகான்' எனும் தலைமுடி சாயம் அவுரி எனும் மூலிகையில் இருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆகவே, இயற்கையாக நரைமுடியை போக்க, அவுரி இலையை தேங்காய் எண்ணையில் காய்ச்சி பயன்படுத்தி வரலாம். கருவேப்பிலையை இடித்து சாறாக்கி அவ்வப்போது குடித்து வந்தால் தலைமுடி கருத்து வளரும். கருத்த அடர்த்தியான தலைமுடி என்பது பெண்களின் அழகு மட்டுமல்ல,ஆரோக்கியத்திற்கான நம்பிக்கையும் தான்.

    மருதாணி என்ற மகத்தான மருத்துவம் கொண்ட மூலிகையை இந்த கால தலைமுறைப் பெண்கள் மறந்து போய்விட்டனர் என்றே சொல்லலாம். திருமணம், திருவிழா ஆகிய விழாக்காலங்களில் மட்டுமே மருதாணி கைகளை நம் ஊரில் பார்க்க முடிகிறது. ஆனால்,நகத்தினை மெருகூட்டும் பூச்சுகள் வருவதற்கு முன்னர் நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தியது மருதாணி இலையைத் தான்.

    மருதாணி வைப்பது என்பது விரல்களின் அழகுக்கு மட்டுமல்ல, பெண்களின் ஆரோக்கியத்துக்கும் தான். மருதாணி இலைக்கு பொதுவாகவே பூஞ்சைக் காளானை கொல்லும் தன்மை உண்டு என்கிறது நவீன அறிவியல். இதைக் கணித்திருந்த நம் முன்னோர்கள் தண்ணீரில் அதிகம் வேலை செய்யும் பெண்களின் விரல்களை நகச்சுற்று எனும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்கவே அதை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது புரிய வருகின்றது.

    சருமத்தின் அழகினை பேணிக்காக்க வெளிப்பூச்சுகள் ஒரு புறமிருக்க, சத்தான உணவு முறையை கையாள்வதும் அவசியம். அதற்காக சித்த மருத்துவம் அறிவுறுத்துவது ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து. 'கோலான் கிலென்சிங்' என்று வெளிநாடுகளில் பிரபலமாகி வரும் இந்த குடல் சுத்தி முறையை சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. குடலை அவ்வப்போது சுத்தம் செய்துக்கொள்வது சத்துக்கள் உட்கிரகித்தலுக்கு ஏதுவாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல தோலின் அழகிற்கும் வித்திடும் முறை.

    சத்தான உணவு என்பது எவ்வளவு அவசியமோ, உடலில் தங்கிய நச்சுக்களை நீக்குவது என்பது அதைவிட அவசியம். எனவே பெண்கள் தினசரி தேவையான அளவு தண்ணீரை குடித்து உடல்கழிவுகளை நீக்குவதோடு தோலினை வறண்டு போகவிடாமல நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் இருமுறை எண்ணைக்குளியல் செய்ய வேண்டுமென சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது. முக்கியமாக பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது. இதனால் தோலில் உள்ள பித்தம் நீங்கி தோல் பளபளக்கும்.

    கண்ணை சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்க அநேகம் பெண்கள் அதிகம் பயன்படுத்துவது வெள்ளரிக்காயைத் தான். உண்மையில் வெள்ளரிக்காயில் அதிகம் வைட்டமின் ஏ சத்து உள்ளது. பித்தத்தை குறைத்து சருமத்தைக் காக்கும். இதில் உள்ள சிலிக்கா வேதிப்பொருள் தோல் வறட்சியைத் தடுத்து தோலிற்கு நீரேற்றம் தரும்.

    அதே போல், பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் தோலின் சுருக்கங்கள் மறைய, உடல் அவயங்கள் பழைய நிலைக்கு திரும்ப பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் எனும் மிகப்பெரும் மருத்துவக்குணம் வாய்ந்த, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்த நம்ம ஊர் பழங்களான கொய்யா, நாவல், நெல்லி, பப்பாளி, மாதுளை ஆகிய பழங்களையும், சத்துக்கள் நிறைந்த சருமத்திற்கு குளிர்ச்சி தரும் காய்கறிகளான வெள்ளரி, பூசணி, கேரட் ஆகியவைகளையும், கீரைகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள சருமம் மிளிரும்.

    நாவல் பழம் போன்ற இயற்கை நிறமிகளை அதிகம் கொண்ட பழங்களில் ஆன்தோசயனின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் புறஊதா கதிர்களால் ஏற்படும் தோல் சிதைவினை தடுக்கும் தன்மையுடையதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இயற்கையில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பழங்களை எடுத்துக்கொள்வது தோல் சுருக்கத்தால் துவண்டுள்ள பெண்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

    சருமத்திற்கு அழகினை கூட்டும் இன்னும் பல்வேறு வேதிபொருட்கள் காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி இவற்றில் இயற்கையாகவே உள்ளதை வெளிநாட்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே பெண்கள் இந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்கலாம். இவற்றில் உள்ள இயற்கை நிறமி வகையான கரோடீனாய்டு நிறமிகள் புற்று நோய் வரை வரவிடாமல் தடுக்கும் என்கின்றன நவீன ஆய்வுகள். அதோடு சருமத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளிடம் இருந்து, தோலினை பாதுகாப்பதாகவும் உள்ளன.

    முகத்தில் பளிச் என்று அழகு சேர்ப்பது மட்டும் அழகு அல்ல, அத்துடன் உடலின் ஆரோக்கியத்தையும் சேர்ப்பது தான் உண்மையான அழகு என்பதை இன்றைய கால பெண்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஆகவே அழகுடன் ஆரோக்கியத்தினை சேர்க்க சித்த மருத்துவம் கூறும் இயற்கை வழிமுறைகளை சேர்த்து பயனடைய வேண்டியது அவசிய தேவை.

    வெளிநாட்டு உணவும், மருந்தும், அறிவியலும் இன்றும் நம்மை தொடர்ந்து ஆட்சி செய்து வந்தாலும், நம் பாரம்பரிய மருத்துவம் மட்டுமே நோய்களை வராமல் தடுத்து, நம் ஆரோக்கியத்தைக் காக்கும் என்பதை பெண்கள் புரிந்துகொண்டால் வீடும், நாடும் கூட அழகு பெறும்.

    Previous Next

    نموذج الاتصال