No results found

    பெண் சாபம்: பாதிப்பில்லாத சிறிய தோஷத்திற்கு பரிகாரம்


    ஜாதகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11-ம் இடங்கள் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும், கேதுவோடு சம்பந்தப்பட்டாலும், இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த பெண் சாபம், தோஷமாகி பரம் பரையாகத் தொடரும்.

    பரிகாரங்கள்

    வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். கடுமையான பெண் சாபத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள் சுவாசினிகள் பூஜை செய்ய வேண்டும் அல்லது கோ பூஜை செய்ய வேண்டும்.

    வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

    ஒரு சில குடும்பத்தில் அப்பா, அம்மா திருமணமான பிறகு பிரிந்திருப்பார்கள். அவர்கள் மகன் அல்லது மகளும் திருமணத்திற்கு பின் பிரிந்திருப்பார்கள். பெண் சாபம் பெற்றவர்களின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் அல்லது ஏழாம் அதிபதியோடு கேது சேர்க்கை பெற்றிருக்கும். பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பலமற்ற தன்மையில் இருக்கும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம் பெறாமல் இருப்பதும் முற்பிறவி சாபம்.

    வம்சாவழியாக தலைமுறை தலைமுறையாக தொடரும் பெண் சாபத்தால் விருத்தி இல்லாத குடும்பத்தினர் செய்ய வேண்டிய பரிகாரம். மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பிற பெண்கள் அழாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பொருளாதார பற்றாக் குறையால் திருமணம் செய்ய முடியாத ஏழைப் பெண்ணுக்கு மாங்கல்யத்திற்குப் பொன், புடவைக்கு பணஉதவி செய்யலாம். ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்ட பெண்களின் ஆசிகளைப் பெறச் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதை வருடத்திற்கு ஒருமுறையாவது செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். இந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு சுமங்கலிப் பெண்களை அல்லது சிறு பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு தாம்பூலம் வழங்கி அவர்களை மூதாதையர் ரூபமாக நினைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

    அல்லது தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களின் படத்திற்கு முன்பு தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.

    மேலும் புடவை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி, மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும். சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி இறந்த சுமங்கலியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும். பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.

    இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும். படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை வீட்டுப் பெண்கள் பயன்படுத்தலாம் அல்லது தானம் தரலாம் அல்லது துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாடு தை மாதங்களில் செய்வது சிறப்பு.

    சுமங்கலி தெய்வங்களை வழிபட்டால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

    Previous Next

    نموذج الاتصال