No results found

    தர்ம காரியங்கள் செய்யும் வாய்ப்பு யாருக்கு அமையும்


    முற்காலத்தில் மன்னர்கள், பெரும் நிலச்சுவான்தார்கள் பலர் தங்களின் சந்ததியினர் மட்டும் வழிபட கோவில் கட்டுவது வழக்கம்.

    தற்போது பெரும்பாலும் தனியார் கோவில் என்பது குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உள்ளது. சிலர் அதிக பொருள் செலவு செய்து கோவில் கட்டியும் கும்பாபிசேகம் செய்ய முடியாமல் கோவிலை மூடியே வைத்து இருக்கிறார்கள். எளிமையாக கட்டிய சில கோவில்களில்

    கும்பாபிசேகம் நடந்து வழிபாட்டிற்கு பயன்படுகிறது. இறை நம்பிக்கை இல்லாத வெகு சிலருக்கு திடீரென கோவில் திருப்பணிகள், திருவிழாக்கள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. சதா சர்வ காலமும் இறை சிந்தனையுடனே வாழும் பலருக்கு தர்ம காரியம் செய்யக் கூடிய வாய்ப்புகள் எளிதில் கிட்டுவதில்லை. ஜோதிடம் பார்க்க வருபவர்களில் பலர் கோவில் கட்டும் அமைப்பு உள்ளதா என்ற கேள்வியை பிரதானமாக கேட்கிறார்கள்.

    தர்மம் தலை காக்கும், தர்மம் செய்தால் கர்மம் தீரும் என தர்மம் பற்றிய பழமொழிகள் பல இருந்தாலும் தர்மம் செய்யும் பாக்கியம் வெகு சிலருக்கே கிட்டுகிறது. அடிப்படை தேவைக்கு தடுமாறு பவர்களுக்கு தன் நிலைக்கு மீறிய தர்ம குணம் இருப்பதையும் போதிய வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தர்ம சிந்தனை இல்லாதவர்களையும் நடை முறையில் பார்க்கிறோம்.

    அதே ஒரு சில வம்சாவளியினர் பல தலைமுறையாக முன்னோர்கள் வழிபாட்டை முறையாக கடைபிடிப்பார்கள். சிலர் எவ்வளவு முயன்றாலும் பித்ருக்களை சாந்தப் படுத்த முடிவதில்லை. இது போன்ற தர்மம், கர்மம் தொடர்பான பல்வேறு முரண்பாடான நிலையை சுய ஜாதக ரீதியான ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானமும், ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானமும், தர்ம கர்மாதிபதி யோகமுமே நிர்ணயம் செய்கிறது.

    பூர்வ புண்ணிய ஸ்தானம்

    மனிதர்களாய் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் பூர்வ புண்ணிய ஸ்தான பலத்தின் வலிமைக்கு ஏற்பவே அமையும். ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. சுய ஜாதகத்தில் 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுப வலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்கினாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் மிகுதியாக புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம்.

    5-ம் இடத்திற்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள்.

    அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவதில் வல்லவர்கள். குல தெய்வ கடாட்சம் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது பொது தொண்டு காரியங்களில் தன்னை ஈடுபடுத்துவார்கள்.

    அதேபோல் இதற்கு அசுப கிரகங்கள் நிற்பது, பார்ப்பது அந்த வீட்டில் 6,8,12-க்குடையவன், அமர்ந்து இருந்தால் பூர்வ ஜென்மத்தில் பாவ காரியங்கள் மிகுதியாக செய்தவர் என்பதை அறியலாம்.அத்துடன் சுப, அசுப கிரகங்கள் கலந்து சம்பந்தம் பெற்றால் பாவம், புண்ணியம் இரண்டிலும் சம்பந்தம் உள்ளவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவர்களால் தர்ம காரியங்களில் ஈடுபட முடியாது அல்லது உரிய வாய்ப்பு அமையாது.

    பாக்கிய ஸ்தானம்

    ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் மூலம் உயர்வானதை அடைய முடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும்.

    சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம், ஒன்பதாம் அதிபதி பலம் பெற்றால் ஜாதகரின் குடும்பத்திற்கென்று தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. உயர்வான உறவுகள் நிரம்ப பெற்றவர்கள். இவர்கள் பலமுள்ளவராகவும், நாணய மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தலைமைப் பண்பான தாய், தந்தைக்கு பிறந்தவர்கள். ஒன்பதாம் அதிபதி லக்ன சுபர்களோடு சேர்ந்து கேந்திர, திரிகோணங்களில் நின்றால் வாழ்நாள் முழுவதும் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

    தந்தையின் செல்வாக்கும், சொல்வாக்கும் அரவணைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இவர்களுக்கு பிறவியிலே அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள்,புண்ணிய காரியங்கள் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, நல்லதாய், தந்தை அமைவது, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்காரர்கள், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கவுரவத் தொழில்,கூட்டுத் தொழில்,வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி, தர்ம குணம் தெய்வ அனுகிரகம், ஜபம், உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம், தான தர்ம குணங்கள், முயற்சி இன்றி கிடைக்கக்கூடிய ஆதாயங்கள், அதிர்ஷ்டம், திறமை, நேர்மை, சமுதாய அங்கீகாரம், போன்ற புண்ணிய பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். ஒருவரின் சுய ஜாதகத்தில் இதில் நல்ல கிரக சம்பந்தம் இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்கள். எண்ணியதை அடைந்து விடுகிறார். அதாவது ஆன்மீக நாட்டம்,கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், கல்வி நிறுவனம் நடத்துதல், தான தர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் தானாகவே தேடி வரும். அத்துடன் குல கவுரவம் சமுதாய அந்தஸ்து நிறைந்தவர்கள். உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தாலும், யோகத்தாலும் முன்னேற்றம் அடைவார்கள்.

    சுயமுயற்சி உள்ளவராக இருப்பார்கள்.

    ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறுகிறார்கள், போராடுகிறார்கள், இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்கள். இவர்கள் தரும காரியத்தில் ஈடுபடும் போது பல்வேறு விதமான தடை, தாமதங்களை சந்திப்பதுடன் அவச் சொல்லும் வந்து சேரும்.

    தர்மகர்மாதிபதி யோகம்

    ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாக கூறப்பட்டுள்ளது தர்ம கர்மாதிபதி யோகம். ஜோதிட ரீதியாக லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தை தர்ம ஸ்தானம் என்றும் பத்தாமிடத்தை கர்ம ஸ்தானம் என்றும் கூறலாம். அந்த இரு இடங்களுக்குரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரின் சம்பந்தம் ஜாதகத்தில் எந்த விதத்தில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். அந்த யோகம் பெற்றவர்கள் அதீதமான பொருள் ஈட்டுவார்கள்.

    அவர்கள் இட்ட கட்டளைக்கு, வழி நடத்தலுக்கு எந்த எதிர்ப்புமின்றி அவரைச் சார்ந்தவர்கள் கட்டுப்படுவார்கள். ஒரு குடும்பத்தை, ஒரு இயக்கத்தை, ஒரு அணியை, ஒரு அலுவலகத்தை ஒரு ஊரை, மாநிலத்தை, நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து திறம்பட நிர்வகிப்பார்கள்.

    கால புருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும்.கால புருஷ ஒன்பதாம் அதிபதி, தர்மாதிபதியான குருவிற்கும் கர்மாதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு+சனி சம்பந்தம் என்பது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

    தர்மம் என்றால் ஒருவர் தனது செய்கையால் தன் குடும் பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த, செய்யும் தொழில் மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள்.

    ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவீதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார். இந்த குரு, சனி சம்பந்தம் பலருக்கு பெரிய திருப்புமுனையை தந்து இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவர்களின் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக ஏராளமான தர்ம காரியங்களைச் செய்தவர்கள். இந்த கிரக அமைப்பை பெற்றவர்களுக்கு குரு + சனி சம்பந்தம் சுபத் தன்மையோடு இயங்கினால் கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

    ஜனன கால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு செயல்பட்டால் ஆன்மீக நாட்டம் இருக்காது. மத நம்பிக்கை, தர்ம சிந்தனை குறையும். குரு சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் அந்த நபர் எவ்வளவு புண்ணிய தர்ம காரியங்களில் ஈடுபட்டாலும் புகழ், அந்தஸ்து கவுரவம் பங்கப்படும். வாழ்க்கைத் தரம் உயராது. தலைமை பதவிகள் கிடைக்காது.

    பரிகாரம்

    கோடி கோடியாய் கொட்டி கோவில் கட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை. அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான். இதனை பூசலார் நாயனார் மெய்ப்பித்திருக்கிறார்.

    சிவபெருமானின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் என்பவர் ஏழை சிவபக்தர்.திருநின்றவூரில் வசித்து வந்த அவர், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். எனினும் எவரிடம் இருந்தும் பொருளுதவி கிடைக்கவில்லை. இதனால் துயரம் அடைந்த பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்.

    இதே நேரத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். வேதியர்களின் ஆலோசனைப்படி குடமுழுக்கு செய்ய நாள் குறித்தான் மன்னன். பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது.

    குடமுழுக்கு தினத்தின் முதல்நாளன்று மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், குடமுழுக்கு நாளினை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாகவும் மன்னனிடம் கூறினார் இறைவன்.

    இதனால் ஆவல் கொண்ட மன்னன், தனது பரிவாரங்களுடன் திருநின்றவூர் சென்று, பூசலாரை வணங்கி நின்றார். மன்னனே தம்மை காண வந்த நோக்கம் அறிந்த பூசலார் மெய்சிலிர்த்தார். தமது உள்ளக்கோவிலில் எழுந்தருள வேண்டி மன்னனையே வேறு நாள் மாற்றச் சொன்ன இறைவனை நினைத்து உள்ளம் உருகினார் பூசலார்.

    செல்வம் முக்கியமில்லை, மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்தினார் பூசலார்.

    மனிதர்களாய் பிறந்தவர்கள் தம்மால் முடிந்த தர்ம காரியங்களை தமது வாழ்நாளில் செய்ய வேண்டும். அதில் தடை இருப்பவர்கள் இருதயக் கோட்டையில் இறைவனுக்கு ஆலயம் அமைத்த 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலாரை வழிபட விருப்பங்கள் நிறைவேறி பாக்கிய பலம் அதிகரிக்கும்.

    Previous Next

    نموذج الاتصال