No results found

    மது அருந்தினால் தாம்பத்திய ஆசை அதிகரிக்குமா?


    'தங்கள் கணவருக்கு இரவில் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அது தரும் போதை தாம்பத்திய உறவுக்கு வலுசேர்ப்பதாகவும் அவர் சொல்கிறார். அது சரியா? தப்பா?' என்ற கேள்வியை திருமணமான பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் எழுப்புவதாக, பாலியல் துறை சார்ந்த டாக்டர்கள் சொல்கிறார்கள்.

    இரவில் மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் டாக்டர்கள், மேற்கண்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதில்: "மது அருந்தினால் தாம்பத்ய செயல்பாடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. தாம்பத்திய உறவு என்பது கணவன்- மனைவி இருவரின் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால், 'டெஸ்டோஸ்டிரான்' என்ற ஹார்மோன் அளவைப் பொறுத்தே இந்த செயல்பாடு அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள், உடலில் இந்த ஹார்மோனை வேகமாகச் சுரக்கச் செய்யும்தன்மை கொண்டவை.

    அவை இயற்கைக்கு மாறாக நரம்புகளைத் தூண்டிவிடுவதால், ஊக்க மருந்து உட்கொண்ட விளையாட்டு வீரர்களை போட்டிக்குகூட அனுமதிப்பதில்லை. அது போல் தாம்பத்ய உறவுச் செயல்பாடுகளில் மது சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடல் மரத்துவிடத் தொடங்கும். போதைப்பொருள்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும், உச்சகட்ட நிலை ஏற்படுவதை தடுத்துவிடவும் செய்யும். சிகரெட் பிடிக்கும் ஆண்களால், அதிக வேகத்தில் தாம்பத்ய செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு, உறவின்போது உறுப்பில் வழுவழுப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுகிறது. இதற்கு, சிகரெட்டில் உள்ள 'நிகோடின்'தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்க உட்கொள்ளும் சில மருந்துகளுக்குக்கூட இந்தத் தன்மை உள்ளது. அப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும்போது பாலியல் செயல்பாட்டு ஆர்வம் குறைந்துபோகும்.

    மது உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக, அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே ஏற்படாத அளவுக்கு மாற்றிவிடுகிறது. உறவில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. அதனால் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் இயக்கம் வெகுவாக குறைந்துவிடும். தாம்பத்திய செயல்பாடுகளில் கணவன்- மனைவி இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மது அருந்திய ஆண், அவரது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பாரே தவிர, தன்னுடைய இணையின் ஆசைகளைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார். அதனால், குடிப்பழக்கம் கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை. குடிபோதையில் மிகச்சிறப்பான முறையில் பாலியல் இன்பத்தை அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அதனால், பாலியல் உறவில் நிறைவைப்பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருள்களைத் தவிர்ப்பது பாலியல் உறவுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பயன் அளிக்கக்கூடியதாகும். தாம்பத்ய இன்பத்துக்காக மதுவை பயன்படுத்துவதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. அதாவது, மது உபயோகித்து உறவுகொள்பவர்களால் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு போதைப்பொருள்கள் இல்லாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது, வாழ்க்கையை சிதைத்துவிடும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மைகளை எல்லாம் பெண்கள், கணவரிடம் எடுத்துக்கூறி, அவர்களை மதுவின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவேண்டும்" என்று, செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள்.

    Previous Next

    نموذج الاتصال