ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வான் மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுபகிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபகிரகம் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த எண்ணிற்குரிய வழிபாட்டு முறையை கடைபிடித்தால் வெற்றி நிச்சயமாகும். பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.