No results found

  சுகப்பிரசவத்துக்கு சித்த மருந்துகள்


  வைத்தியர் ஐயா, புதுசா கல்யாணமான என் பொண்ணு வாந்தி வாந்தியா எடுத்து, மயக்கம் போட்டு விழுந்துட்டா, நீங்க தான் வந்து என்னனு பாத்து நல்ல செய்தியா சொல்லணும்" என்று திருமணமான புதுமணப்பெண்ணின் வாந்தி, பித்த வாந்தியா? அல்லது கர்ப்ப வாந்தியா? என்று நாடி பார்த்து கணித்து சொல்லும் காலம் மலையேறிவிட்டது. இனி அதைப்போன்ற காட்சிகளை பாக்கியராஜ் படங்களில் தான் பார்க்க முடியும். நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளும் பரிசோதனை கிட் வைத்து மாதந்தோறும் பரிசோதனை செய்து அவர்களே உறுதி செய்துகொள்வது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

  திருமணமான அடுத்தடுத்த மாதங்களில் சிறுநீர் சோதனை அட்டையில் இரட்டை கோடு வந்ததும் தம்பதிகளுக்கு அளவளாவிய மகிழ்ச்சி. பெண்கள் தம் வயிற்றில் கருவை சுமப்பதில் தான் (மகப்பேறு காலம்) அவர்களுக்கு உச்சகட்ட ஆனந்தம். அவர்களுக்கு தாய்மை மிகப்பெரிய பரிசு. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக இருப்பது என்பது மிகச்சிறந்த உணர்வு. அத்தகைய மகப்பேறு காலத்தில் அவர்கள் சமாளிக்கும் உடல் உபாதைகள் ஏராளம். மகப்பேறு காலத்தின் முதல் 3 மாதங்களில் மசக்கை எனும் கர்ப்பகால வாந்தியை சமாளிப்பது பலருக்கு மிகக்கடினம். சிலருக்கு இந்த மசக்கை கர்ப்பகாலம் முழுவதும் குமட்டி, குமட்டி வாந்தி எடுக்கும் நிலை, மகளிரை துன்புறுத்தும். கர்ப்ப காலத்தில் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன் முக்கியமாக பீட்டா-எச்சிஜி எனும் சுரப்பு அதிகரிப்பால் இந்த மசக்கை உருவாகும். திருமணமான பெண்கள் மாதவிலக்கு தள்ளி போவதுடன் இந்த மசக்கை உண்டாவதை கர்ப்ப காலத்தின் அடையாளமாக கொள்ளலாம். உண்ட உணவு சிறிது கூட வயிற்றில் தங்காமல் அப்படியே வாந்தியாகி பெண்களை சோர்வடையச்செய்யும். அதற்கான தீர்வை தேடுபவர்கள் ஏராளம்.

  கர்ப்ப காலத்தில் மருந்துகளை கட்டுப்பாடோடு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை உலக அளவில் விடுத்த முதல் நிகழ்வு 1960 களில் நடந்த தாலிடோமைடு என்ற மருந்தால் ஏற்பட்ட விபரீதம். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தது. என்னவெனில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மசக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த மருந்தால் ஜப்பான், கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறந்த சிசுக்கள் பலவும் கை,கால் குறைபாடுள்ளவையாக இருந்தது குறிப்பிடத்தக்க வருத்தம் தரும் நிகழ்வு. ஆனால் அவர்களுக்கு சித்த மருத்துவம் தரும் எளிய மருந்து 'மாதுளை மணப்பாகு'.

  சித்த மருத்துவ கணிப்புப்படி அதிகரித்த பித்தம் ஒன்றிணைந்து, இந்த மசக்கையை உண்டாக்குவதால் மாதுளை பித்தத்தை குறைத்து வாந்தியை நிறுத்தும் தன்மை உடையது. இது மிகவும் பாதுகாப்பானது. மாதுளையில் அதன் நிறத்திற்கு காரணமான அதிகப்படியான ஆன்தோசயனின் நிறமிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்தையும் நல்ல போஷாக்கையும் அளிக்கும் மாதுளம் பழம் என்பது பலரும் அறிந்தது. அதனைக் கடந்து கர்ப்பகாலத்தில் மாதுளை பழச்சாற்றினை எடுத்துக்கொள்ள பிறக்கும் குழந்தை அழகாகவும்,புத்தி தெளிவாகவும் பிறக்கும் என்பது வாய்மொழி செய்தி அந்த வரிகளை உறுதி செய்கின்றன நவீன அறிவியலின் சில ஆய்வுகள்.

  மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் தன்மையுள்ள பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு நன்மையையும் தோலிற்கு அழகையும் கொடுக்கக்கூடியது. அதில் உள்ள வேதிப்பொருட்களால் கர்ப்பகாலத்தில் கருவின் மூளையில் ஏற்படும் காயங்களை தடுத்து, புத்தி தெளிவை உண்டாக்குவதாக எலிகள் மீது நடத்திய ஆய்வுமுடிவுகள் கூறுவது சிறப்பு. மேலும் நஞ்சுக்கொடியின் அழுத்தத்தை குறைத்து, தடைபட்ட கருவளர்ச்சியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும். மாதுளை மட்டுமல்லாமல் மசக்கையில் பலனளிக்கும் பல மூலிகை கடைசரக்குகள் உள்ளது. மசக்கையில் இருந்து விடுபட இஞ்சியை அவ்வப்போது நீரில் அல்லது பாலில் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளலாம். பல வெளிநாடுகளில் கூட 'மார்னிங் சிக்னஸ்' எனப்படும் மசக்கை வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சியை மருந்தாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாலில், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொண்டாலும் வாந்தி குறையும். டீ, காபிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். புதினா இலைகளை தேநீராக்கி குடிப்பதன் மூலமும் பலன் பெறமுடியும். கர்ப்ப காலத்தில் மசக்கை வாந்தியால் ஏற்படும் சத்துக்கள் இழப்பையும், கருவில் வளரும் மகவுக்கு தேவையான போஷாக்கையும் ஈடுகட்ட இரும்புசத்து மாத்திரைகளையும் பாதுகாப்பான சத்துமருந்துகளையும் எடுத்துக்கொள்வது அவசியம். சித்த மருத்துவத்தில் உள்ள 'அயசெந்தூரம்' மற்றும் 'அன்னபேதி செந்தூரம்' ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அத்துடன் நெல்லிக்காய் லேகியம் எனும் சித்த மருந்து, சத்துக்களை உள்ளடக்கிய அமிர்த பெட்டகமாக உள்ளதால் அதனையும் எடுத்துக்கொள்ளலாம். அதியமான் அவ்வைப்பாட்டிக்கு கொடுத்த நெல்லிக்கனியைப் போல, பெண்கள் தம் கருவில் உள்ள மகவிற்கும் கொடுத்து வருங்கால சந்ததியின் ஆயுள்ரேகையை கருவிலேயே உறுதிசெய்யலாம். மேலும் 'கருவேப்பிலை சூரணம்' எனும் சித்த மருந்தையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து அனீமியா எனும் ரத்தகுறைவு நோய்க்கு தீர்வு தரும். கருவேப்பிலை ஈர்க்கினை சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமிட்டு குடிப்பதாலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இயற்கையாய் கூடும். மசக்கை வாந்தியும் நிற்கும். கர்ப்ப கால அசீரணமும் நீங்கும். மசக்கையைத் தொடர்ந்து பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அசீரணம், புளியேப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் ஏற்பட்டு அவர்களைத் துன்புறுத்தும். இதற்கு ஏலக்காய் முதன்மையாக சேர்ந்த 'ஏலாதி சூரணம்' என்ற சித்த மருந்து உதவும். அவ்வப்போது இதனை எடுத்துக்கொள்ள நன்மை தரும். மேலும் இதனால் பிரசவ காலத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் தோலில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம் குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலி, இடுப்பு பகுதியில் வலி போன்ற உபாதைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நல்லது. இந்த வலிகளுக்கு வெளிப்பிரயோக சித்த மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மிக்கது உள் மருத்துவம் மட்டுமல்ல. வெளி மருத்துவமும் கூட தான். அந்த வகையில் இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும். அதை ஐந்தாம் மாதம் முதலே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த துவங்குவது நல்லது. வலியை குறைக்க 'பிண்ட தைலம்' என்ற மருந்தை பயன்படுத்தலாம். 'குந்திரிக்க தைலம்' என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவ தசைகள் தளரும். மகப்பேறுகாலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் பருவங்களில் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சித்த மருத்துவம் பட்டியலிடுகிறது. அவற்றை முறையாக சித்த மருத்துவர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவத்திற்கு வழிகோலும். மாறாக, நஞ்சுக்கொடி மகவின் கழுத்தை சுற்றி இருத்தல், அதிக எடை உள்ள மகவு, அதிக ஆபத்துமிக்க பிரசவம் என்று கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரசவத்திற்கு பின் நல்லபலன் தரும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதங்களில் 'பாவனபஞ்சாங்குல தைலம்' என்ற சித்தமருந்து பெரும் பயனளிக்கும். கருப்பையானது விரிவடையும் போது அதன் பின்பகுதியில் உள்ள மலக்குடலை அழுத்தும்போது மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவே பின்னாளில் பல பெண்களுக்கு மூலவியாதிக்கு வித்திடும். அவர்கள் பாவன பஞ்சாங்குல தைலத்தை பயன்படுத்த கர்ப்ப சூடு, சிறுநீர்ப்பாதை எரிச்சல், மலச்சிக்கல் இவற்றை போக்கும். மேலும் கர்ப்பத்தில் குறைவான பனிக்குடநீரைக் கொண்டுள்ள பெண்களுக்கு தண்ணீர்விட்டான் எனும் மூலிகை சேர்ந்த மருந்துகள் நல்ல பலன் தரும். நவீன வாழ்வியலில் துரித உணவுகளை அதிகம் நாடும் பெண்கள் கர்ப்ப காலத்திலே சர்க்கரை நோயில் அகப்பட்டு கொள்வதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது. நடை பயிற்சி, உடல் பயிற்சி, இயற்கை உணவு முறைகள் இவற்றை பின்பற்ற மறந்தக்காரணத்தால் 'ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' எனும் கர்ப்ப கால நீரிழிவு பலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் மாறிவிடுகிறது. அதற்காக சித்த மருத்துவம் கூறும் உணவு முறைகளும், மருத்துவ முறைகளும், யோகாசன பயிற்சி முறைகளும் பின்பற்றுதல் அவசியம். அந்த வகையில் மற்றொரு சவாலான நோய்நிலை கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் அதாவது 'ஜெஸ்டேஷனல் ஹைப்பர்டென்ஷன்'. இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பிரசவகாலத்தில் வலிப்பினை ஏற்படுத்தி பல்வேறு சிக்கல்களை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்தும். பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் சித்த மருத்துவம் கூறும் யோகாசனப் பயிற்சிகளை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தனித்தனி முறைகளை பயிற்சி செய்து வருவது நல்லது. இதனால் தாய்க்கு மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். கருவில் வளரும் மகவுக்கும் ஆரோக்கியம் கிட்டும். முதல் மூன்று மாதங்களில் தாடாசனம், உத்தனாசனம், சேது பந்தாசனம், பூர்ணதிதலி ஆசனம், கட்டிசக்ராசனம் ஆகியவற்றுடன் பிராணாயாமம் செய்தல் சிறப்பானது. கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்களில் தாடாசனம், கட்டி சக்ராசனம், வஜ்ராசனம், அனந்தாசனம், சீதலி பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம் இவற்றை பயிற்சி செய்தல் நல்லது. கடைசி மூன்று மாதங்களில் அர்த்த திதலி ஆசனம், பூர்ண திதலி ஆசனம், பிராணாயாமம், தியானம், மற்றும் ஓய்வு நிலை பயிற்சிகளை செய்தல் நல்லது. இவை சுகப் பிரசவத்திற்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தின் போது கணவனின் கையைப்பிடித்து சிறிது தூரம் மேற்கொள்ளும் உல்லாச நடை கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தை உண்டாக்கி மன உறுதியையும், ஆனந்தத்தையும் தரும். இதனை புரிந்துகொண்டு ஆண்கள் செயல்படுவதும், அவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்வதும் இன்றைய அவரச வாழ்வியலில் அவசியமான ஒன்று. இயற்கை உணவும், வாழ்வியல் நெறிமுறைகளும், இன்னும் பல சித்த மருத்துவமுறைகளும் காலம் கடந்து நம்மை காத்துக்கொண்டு நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நலப்பெட்டகமாக உள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்தல் எளிய சுகப்பிரசவத்திற்கு மட்டுமின்றி மெய்நலத்திற்கும் வழிவகுக்கும்.

  Previous Next

  نموذج الاتصال