No results found

    உறவு, நட்பு இடையே பிரைவசி முக்கியம்


    பொதுவான பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் விலகி, ஓரிடத்தில் அது வீடோ, வெளியிடமோ, யாராலும் கண்காணிக்கப்படாமல், யாருடைய தொல்லையும் இல்லாமல், தன் விருப்பப்படி இயல்பாக இருக்கும் நிலையை `பிரைவசி' எனலாம். இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும், சிலவற்றைப் பகிராமல் இருப்பதும், பிறருடைய அந்தரங்க எல்லையை மதிப்பதும் அதன் அங்கம்தான். தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை.

    அலுவலக நண்பர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட அந்தரங்க விஷயங்களை, அவருடன் உறவு சீர்கெட்ட நிலையில் அலுவலகத்துக்குள் அம்பலப்படுத்துவதோ, பரப்புவதோ கூடவே கூடாது. அடுத்தவரின் கோப்புகள், டைரி, போன், அவர் இல்லாத நேரத்தில் திறந்து பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது, அவர்களின் பணிக்குறிப்புகள், கணினித்திரை இவற்றைத் தேவையின்றி பார்த்தல் அவரின் அந்தரங்க எல்லையைத் தொடும் செயலே. அலுவலகத்தில், அலுவலகப் பணிகளுக்கே முன்னுரிமைகொடுக்க வேண்டும். மருத்துவர், மனநல ஆலோசகர், வழக்கறிஞர், செய்தியாளர், ஆலோசகர் போன்றோரிடம் ஆலோசனைக்காக வருபவர்கள், பிறரிடம் பகிர்ந்துகொள்ளாத தகவல்களைக்கூடக் கூறுவார்கள். இந்த அந்தரங்க விஷயங்களைக் கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை வெளிப்படுத்தக் கூடாது.

    சிறியவர், பெரியவர் பேதமின்றி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மதிக்கப்படவேண்டியதே. சிறியவர்கள்தானே என்று குழந்தையின் தன்மதிப்பைக் குறைக்கும் விஷயங்களை வெளிப்படுத்தவோ கிண்டல் செய்யவோ கூடாது. அதுபோல, பதின்வயது பிள்ளைகளை குறிப்பிட்ட எல்லைவரை கண்காணிக்கலாமே தவிர, அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைச் சோதிப்பது தவறு. பெரியவர்கள் தம்மைப் புரிந்துகொள்வார்கள், தங்கள் மதிப்பு குறையாது என்ற நம்பிக்கை ஏற்படும்போது பிள்ளைகளும் நிச்சயம் வெளிப்படையாக இருப்பார்கள். அதேபோல வீட்டில் இருக்கும் முதியவர்களின் தனி உரிமைகளும் அந்தரங்கமும் காக்கப்பட வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்து நண்பர் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட விஷயங்களை, நமக்கு நெருக்கமான வேறொருவரிடம் பகிர்வது, அந்த நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்படவில்லை எனில், நம் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் நட்பையும் இழக்க நேரிடும். 

    Previous Next

    نموذج الاتصال