No results found

  பிரசவ கால மூலநோய்க்கு இயற்கைத் தீர்வுகள்


  பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும், காலம் முழுவதும் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தும் நோய்நிலைகளுள் முக்கிய இடம் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். அதில் மூலநோயின் வலியும், வேதனையும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எதிரிக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது என எண்ணுவார்கள் இந்நோயால் அவதிப்படுபவர்கள். மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமும், மறந்து போன பாரம்பரிய வாழ்வியல் நெறிமுறைகளும் மூலநோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாக உள்ளன என்பது ஒருபுறம். மறுபுறம் பார்த்தால், பெண்களுக்கு பிரசவ காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் கருவில் உள்ள மகவு கருப்பையில் வளர்ந்து அதன் பின்னே உள்ள மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது.

  கிட்டத்தட்ட 40 சதவீதம் பெண்கள் பிரசவத்தின் போதும், பிரசவத்தின் பின்னரும் மூல நோய்குறிகுணங்களால் அவதியுறுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. இந்த வருத்தமளிக்கும் புள்ளி விவரம் பல ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. நோயின் தாங்க முடியாத குறிகளோடு, பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டி, குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உரியது. இத்தகைய குணத்திற்கே பெண்களுக்கு விருதுகள் பல குவியவேண்டும். ஆனால் எதையும் எதிர்நோக்காமல் அன்றாட வாழ்வினை நகர்த்துவது அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.

  'குழந்தை பிறந்து நாலு நாள் தான் ஆச்சு, மலம் கழிக்கும் போது ரத்தம் சிதறுகிறது அதோடு வலியும் எரிச்சலும் அதிகமா இருக்கு' என்று மருத்துவரை அணுகும் பெண்கள் பலர் இத்தகைய வேதனையை எண்ணித் துடிப்பது அதிகம். பிரசவத்திற்கு பின்னர் கருப்பையில் இருந்து வெளியேறும் குருதியுடன், மூலநோயில் வெளிப்படும் குருதியும் ஒன்று சேர்ந்து பெண்களை ரத்த சோகை நோய்க்கு அடிமையாக்கி இன்னும் உடலை சோர்வாக்கும். இந்த மன வேதனையால் தாய்ப்பால் சுரப்பும் குறையக்கூடும். சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதமும்,பித்தமும் மலக்குடலில் ஒன்றிணைந்து மூல நோயை உண்டாக்குகிறது. இதனை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்ற தேரையர் சித்தரின் நோய்களுக்கான முதல் காரணப் பாடல் வரிகளால் அறியலாம். அதாவது மலக்குடலில் சேரும் அதிகப்படியான வாயுவும், சூடும் ஒன்றிணைந்து மலச்சிக்கலையும், நோய்நிலையையும் உண்டாக்கி குறிகுணங்களை தோற்றுவிக்கிறது.

  ஆகவே வாதம்,பித்தம் தணிக்குப்படியான அதாவது வாயுவையும், சூட்டையும் குறைக்கும்படியான சித்த மருத்துவம் கூறும் மூலிகைகளை பயன்படுத்த மூல நோயில் நல்ல தீர்வு எட்ட முடியும். சோற்றுக்கற்றாழை, கடுக்காய், திரிபலை, நிலாவாரை, குங்கிலியம், தொட்டாற்சிணுங்கி, கருணை, பிரண்டை, வெங்காயம், துத்தி போன்ற பல எளிய மூலிகைகள் மூலநோய்க்கு பயன்தருவதாக உள்ளன. சுவைகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஆறு சுவைகளும் நம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டுவது அவசியம். இனிப்பையும்,காரத்தையும் அதிகம் கொண்டாடும் நாம் மற்ற சுவைகளை கொண்டாடுவதில்லை. சுவை மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தின் ஒரு அங்கம். ஆறு சுவைக்கும், உலகில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும், உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக, ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் ஆறு சுவைகளும் கொண்ட ஒன்று எளிய சித்த மருத்துவ மூலிகையான 'கடுக்காய்' தான். இந்த கடுக்காய் மூல நோய் வகைகள் அனைத்திற்கும் நல்ல பலன் தரக்கூடியது.

  மூலநோயில் மகத்துவமிக்க மூலிகையான துத்தி இலை என்ற கீரையை அறிந்திடாத தமிழ் சமூகம் இல்லை எனலாம். துத்தி கீரை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது மூலநோயில் உண்டாகும் வீக்கத்தை குறைத்து அதன் வலி, வேதனையை போக்கும். பிரண்டை எனும் எளிய மூலிகையும் மூல நோயில் நிவாரணம் தரும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். உணவில் நெய் சேர்த்துகொள்வது என்பதும் வாதம், பித்தம் இரண்டையும் சமனாக்கும் எளிய வழி. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபலை எனும் மருந்து வீக்கத்தை குறைப்பதுடன் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி நோய்நிலையை குறைக்கும். இதனை மோரில் கலந்து எடுத்துக்கொண்டால் பலன் தரும். தொட்டால் சிணுங்கி என்ற தொட்டால் இலைகள் சுருங்கும் தன்மையுடைய மூலிகை இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதன் இலைகள் பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் வாதத்தையும்,பித்தத்தையும் குறைக்க அவ்வப்போது எண்ணெய் குளியல் எடுத்தலும்,பேதி மருந்துகளை எடுத்தலும் மூல நோயின் குறிகுணங்களுக்கு நிவாரணம் தரும். சித்த மருத்துவம் கூறும் எளிமை வழிமுறையாக ஆமணக்கு எண்ணெய்யை பாலில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொள்ள வாதம், பித்தம் இரண்டும் குறைந்து நோய்குறிகளை குறைக்கும். மூலநோயில் எரிச்சலால் அவதியுறும் பெண்கள் கற்றாழை சாறுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ள பித்தம் தணிந்து எரிச்சல் குறையும். இதனை 'குமரி எண்ணெய்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. மூல நோயில் உண்டாக்கும் ரத்தப்போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்க்கலாம். ழைப்பூ, அத்திப்பிஞ்சு, மாதுளைப்பிஞ்சு, பிஞ்சு காய்கறிகள் இவை நல்ல பலனைத் தரும். இம்பூறல் எனும் மூலிகை ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை. இதனை 'இம்பூறல் காணாது ரத்தம் கக்கி செத்தான்' என்ற சித்த மருத்துவ பழமொழியால் அறியலாம். மேலும் சங்கு,சிலாசத்து, படிகாரம், நாகம் ஆகிய உபரச,உலோகப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பற்ப மருந்துகளும் இந்நோய் நிலையில் உதவும். மூல நோயால் அவதியுறும் பெண்கள் குடலில் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்காத உணவுமுறைகளை பின்பற்றுவது அவசியம். வாழை,உருளை, பட்டாணி வகைகள் இவை குடலில் வாயுவையும், அசைவ உணவுகள், டீ,காபி போன்றவை குடலில் பித்தத்தையும் அதிகரித்து நோய்நிலையை அதிகரிக்கும். ஆகவே பெண்கள் அவரவர் உடல் நிலைக்கு பொருந்தும்,பொருந்தாத உணவுகளை அறிந்து எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். இது மூலம், ஆசன வெடிப்பு ஆகிய நோய்நிலைகளில் நற்பலன் தரும். இதனை சித்த மருத்துவம் 'மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்று குறிப்பிடுகிறது. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கருணைக்கிழங்கு லேகியமும், தேற்றான் கொட்டை லேகியமும் மூல நோயால் அவதியுறும் பெண்களுக்கு பெரிதும் உதவும். இதனை இன்னும் சில சித்த மருந்துகளோடு ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால் நோய்நிலையில் மாற்றம் வரும். மலச்சிக்கலை தீர்க்க ஆமணக்கு எண்ணெய், நிலாவரை சூரணம், கடுக்காய் சூரணம்,சிவதை சூரணம் ஆகிய சித்த மருந்துகள் உதவும். ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும். இது 'குழந்தைகளை தாய்போல் வளர்க்கும்' என்று சித்த மருத்துவம் கூறுகிறது. மலச்சிக்கலை தீர்க்கவும், உட்சூட்டைக் குறைக்கவும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள நார்சத்து மூலநோயில் நன்மை பயப்பதோடு, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். எண்ணெய் தோய்ந்த பொருட்களும், மசாலா மிதக்கும் பொருட்களும், அசைவ உணவுகளும் குடலில் வாதம் மற்றும் பித்தத்தைக் கூட்டி மூல நோயாளிகளின் வலியை,வேதனையை பெருக்கி மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தும். ஆகவே நவீன வாழ்வியலை விடுத்து, துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது. மூலநோய் எரிச்சலுக்கு எளிய வீட்டு வைத்திய மருந்து மோர் தான். மோரை உணவுப்பொருளாக பார்க்காமல் மருந்தாக பார்ப்பது சித்த மருத்துவம். அதனை மூல நோயின் எரிச்சலால் அவதிப்படும் பெண்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் நல்லது. எளிமையாக சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய்யை பயன்படுத்த நோய்க்காரணத்தை குறைத்து நன்மை பயக்கும். எரிச்சல் உள்ளவர்கள் அவ்வப்போது சீரகம் அல்லது சோம்பு இவற்றில் ஒன்றை கசாயமிட்டு குடிக்க குறிகுணங்கள் விரைவில் மாறும். மலம் கழித்த பின் சிட்ஸ் பாத் எடுக்க திரிபலை சூரணம் பயன்படுத்தலாம். நார்சத்து அதிகமுள்ள பிஞ்சு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலை போக்கி மூலநோய் மற்றும் ஆசனவெடிப்பு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். மூலக்குடோரி தைலம் என்ற சித்த மருந்தினை பயன்படுத்துவது மூலநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றது. அதாவது கடுக்காய் பிஞ்சும், ஆமணக்கு எண்ணெய்யும் சேர்ந்தது தான் இந்த மருந்து. மிக எளிய மருத்துவ முறைகளே சித்த மருத்துவத்தில் பல்வேறு வியாதிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். குங்கிலிய வெண்ணெய் எனும் சித்த மருந்து மூல நோயின் எரிச்சலை போக்கும்,உட்சூட்டினை நீக்கும். இதில் சேரும் குங்கிலியம் எனும் மூலிகைப்பிசின் பித்தத்தை குறைத்து வீக்கத்தை குறைக்கும். மூல நோயால் அவதியுறும் பெண்கள் சித்த மருத்துவம் கூறிய ஆசனப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். பாலாசனம், பாவன முக்தாசனம், வஜ்ராசனம், விபரீத கரணி, பத்த கோணாசனம், அர்த்த மச்சேந்திராசனம், ஹாலாசனம் ஆகிய ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ள அபானவாயு வெளியேறி மூல நோயின் வேதனையை குறைக்கும். அதோடு சீரணத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும். அத்துடன் இடுப்பு தசைப் பயிற்சி செய்வதும் நல்லது. மூல நோயின் பெரும்பாலான அறிகுறிகள் குழந்தை பிறப்புக்கு பின்னர் தன்னிச்சையாகவே பல பெண்களுக்கு குறைந்துவிடுகிறது. உணவில் நார்ச்சத்து அதிகரிப்பதன் மூலமும், மலச்சிக்கலை போக்குவதன் மூலமும் இந்த நோய் நிலையின் குறிகுணங்களில் நல்ல முன்னேற்றம் பெற முடியும். காலை விரதமும், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதும், தினசரி ஒரு லிட்டருக்கு குறைவான நீராகாரங்களை எடுத்துக்கொள்வதும், உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளாததும் மூலநோயில் தாபிதத்ததை உண்டாக்கி குருதிப்போக்கை உண்டாக்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த ஆய்வுமுடிவுகள் கூறுவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவம் கூறிவிட்ட மூலநோய்க்கான காரணமுறைகளோடு பொருந்துவது என்பது ஆச்சர்யத்திற்குரியது. ஆக சித்த மருத்துவம் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்தலே அடுத்த தலைமுறையை நோயிலிருந்து காத்து மகிழ்ச்சியான வளமான வாழ்விற்கு அடித்தளமிடும்.

  Previous Next

  نموذج الاتصال