உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும். பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுபடும். உதாரணமாக, உங்களுக்கு டிசம்பர் 1-ம்தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.
கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும். உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள். 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் கருமுட்டை வரும் 30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் கருமுட்டை வரும் 34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் கருமுட்டை வரும் இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.