கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும். கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை. பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.
மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%. இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.