No results found

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா


    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இந்த தலத்தில் சமயக்குரவர்களுள் ஒருவரான சம்பந்தர், சிவவாத இருதயர்- பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். முருகனின் அம்சம், இளைய பிள்ளையார் என்றும் இவர் வழங்கப்படுகிறார். சட்டைநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒருமுறை திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பார்வதி தேவியான திருநிலைநாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த தல வரலாற்றை நினைவு கூரும் விதமாக திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான நேற்று கோவில் மண்டபத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நாயன்மார் மண்டபத்தில் திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது. ஊமையம்மை எழுந்தருளி ஞானசம்பந்தருக்கு தங்க கிண்ணத்தில் பால் கொடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் மார்க்கோனி, பொருளாளர் கோவி நடராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் செய்திருந்தார்.

    Previous Next

    نموذج الاتصال