மேலும் இறுதி மாதவிடாய் நிலையை பல்வேறு உணவுப் பொருட்களும், உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் மாற்றங்களும், இன்றைய நவீன வாழ்வியலில் மதுபானம், புகையிலை போன்ற பழக்க வழக்கங்களும் தீர்மானிக்கும் தன்மையுள்ளதாக உள்ளது. இத்தகைய கடைசி பூப்பில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவு. அதற்கு தீர்வாக எச்.ஆர்.டி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொள்வது பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது. முக்கியமாக ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை உண்டாக அதிகம் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு தொடர்ந்து இத்தகைய ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வோருக்கு மாரடைப்பு கூட வரக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள். இதுமட்டுமின்றி சர்க்கரை நோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை நோய்கள், மன அழுத்தம் போன்ற நோய்நிலைகளை உண்டாக்க இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை காரணமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஆக மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்படும் நபர்கள் மட்டும் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, பெண்கள் உடலுக்கு தேவையான தாவர ஈஸ்ட்ரோஜென் பல்வேறு மூலிகைகளில் இயற்கையாக உள்ளதால் அவற்றை நாடுவது நலம் பயக்கும்.
அந்த வகையில் சித்த மருத்துவ தத்துவத்தின் படி வாதம், பித்தம் ஆகிய நாடி குற்றங்கள் இரண்டும் மாறுபாடு அடைந்து மெனோபாஸ் சார்ந்த குறிகுணங்கள் உண்டாவதால், அத்தகைய நாடிகளை சீர் செய்யும் பொருட்டு மருந்துகளையோ, மூலிகைகளையோ எடுத்துக்கொள்வது நல்ல முன்னேற்றம் தரும். பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வாதத்தின் சார்பாக நரம்பு தளர்ச்சி, மனப்பதட்டம், மனநிலை மாற்றங்கள், கருவாய் வறட்சி, தோல் வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை, லேசான வெப்பம், மலச்சிக்கல், மார்பு படபடப்பு மற்றும் மூட்டு வலி போன்ற பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கும். இத்தகைய நிலைகளில் வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.
நரம்பு தளர்ச்சி, மன பதட்டம், மன அழுத்தம் போன்ற குறிகுணங்களுக்கு அமுக்கரா கிழங்கு நல்ல பலன் அளிக்கும். ஏற்கனவே கூறியதைப் போல் அமுக்கரா கிழங்கு பெண்களின் அனைத்து பருவ நிலைகளிலும் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளுக்கு நல்ல பலன் தரும். இதனை தினசரி 2 முதல் 5 கிராம் வரை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கமும் வரும். ஏனெனில் இறுதி மாதவிடாய் நிலைகளில் தூக்கம் கெட்டு பல பெண்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மூட்டு வலி, உடல் வலிகளுக்கு எளிய நல்ல பலன் தரும் மூலிகை நொச்சி தான். அவ்வப்போது நொச்சி இலையை மஞ்சள் பொடியுடன் சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலையை மிளகுடன் சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள லூட்டியோலின், குர்சிடின் ஆகிய வேதிப்பொருட்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதாகவும், நமைச்சலை நீக்குவதாகவும் உள்ளது. இந்த எளிய மூலிகையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.