இந்தியாவை பிளவுபடுத்த நினைக்கிறார்கள்... பாத யாத்திரையின் முதல் நாளிலேயே பா.ஜ.க.வை தாக்கிய ராகுல்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, இந்திய ஒற்றுமை பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி இன்று பாத யாத்திரையை தொடங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி, பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் கடற்கரை சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பாத யாத்திரையின் நோக்கம் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் மட்டுமல்ல, இன்று லட்சக்கணக்கான மக்கள், இந்திய ஒற்றுமை பயணம் தேவை என்பதை உணர்ந்துள்ளதாகவும், இந்தியாவை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: மூவர்ணக்கொடி என்பது ஒரு துணியில் உள்ள மூன்று நிறங்கள் மற்றும் ஒரு சக்கரம் மட்டும் அல்ல, அதற்கும் மேலானது. மூவர்ணக் கொடி எளிதில் வந்துவிடவில்லை, அது இந்திய மக்களால் கிடைத்தது, அனைத்து மதங்களுக்கும் மொழிகளுக்கும் சொந்தமானது. நமது மூவர்ணக் கொடியானது, எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இன்று இந்தக் கொடி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்று ஒவ்வொரு அமைப்பும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவர்கள் இந்தியாவை மத அடிப்படையில், மொழிகளின் அடிப்படையில் பிளவுபடுத்த நினைக்கிறார்கள். ஆனால், இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது, எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும். நாடு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்துடன், நாடு பேரழிவை நோக்கிச் செல்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாஜக அரசு திட்டமிட்டு தாக்கியுள்ளது.

சில பெரிய வணிகங்கள் இன்று முழு நாட்டையும் கட்டுப்படுத்துகின்றன. இதற்கு முன்பு இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்படுத்தியது. இன்று இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு 3-4 பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு ராகுல் பேசினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர். 150 நாட்கள் நடைபெறும் இந்த பாத யாத்திரையின்போது, நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Previous Next

نموذج الاتصال